புதுடெல்லி: இவ்வாண்டில் இந்திய மாணவர்களின் 80 விழுக்காடு விசா விண்ணப்பங்களைக் கனடா நிராகரித்துள்ளதாக அந்நாட்டின் குடியுரிமைத் துறை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
கடந்த பத்தாண்டுகளில் இந்த அளவுக்கு மாணவர் விசா நிராகரிக்கப்பட்டதில்லை. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய மாணவர்களே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 2022ல் 18% மாணவர்கள் கனடா செல்ல விருப்பம் தெரிவித்த நிலையில், 2024ல் அது 9% ஆகக் குறைந்துள்ளது.
நிதி ஆதாரம், மொழித் தேர்வில் மாணவர்கள் பெற்ற புள்ளிகள், விரிவான மேற்படிப்புத் திட்டம் ஆகியவற்றில் வலுவான நிலையில் இருந்த மாணவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்பட்டதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின.
வீட்டுவசதிப் பற்றாக்குறை, அரசியல் சூழல் போன்ற பல்வேறு காரணங்களால் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இந்திய மாணவர்களில் ஒன்பது விழுக்காட்டினரே சிறந்த தெரிவாகக் கனடாவைக் கருதுவதாகவும் 31 விழுக்காட்டினர் ஜெர்மனியை முதன்மைத் தெரிவாகக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன.