புற்றுநோய் ஆராய்ச்சி: சென்னை ஐஐடி முன்னாள் மாணவர் ரகுராமன் கண்ணனுக்கு அமெரிக்காவில் உயரிய கௌரவம்

1 mins read
72ef38cd-ac58-4d7f-b898-6ce477c5c94e
புற்றுநோய் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியவர் சென்னை ஐஐடி முன்னாள் மாணவர் ரகுராமன் கண்ணன். - படம்: தினமலர்

புதுடெல்லி: புற்றுநோய் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியதற்காக, சென்னை ஐஐடி முன்னாள் மாணவர் ரகுராமன் கண்ணனுக்கு அமெரிக்க விஞ்ஞானிகள் அமைப்பின் உயரிய கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் செயல்படும் ‘நேஷனல் அகாடமி ஆஃப் இன்வென்டர்ஸ்’ எனும் அமைப்பு, மனித குலத்தின் மேன்மைக்காகக் கண்டுபிடிப்புகளை உருவாக்கும் விஞ்ஞானிகளுக்கான ஒரு சிறந்த அமைப்பாகும்.

இந்த அமைப்பில் உறுப்பினராகத் தேர்வு செய்யப்படுவது விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் மிக உயரிய கௌரவமாகக் கருதப்படுகிறது.

அந்த வகையில், இந்தியாவைச் சேர்ந்த புற்றுநோய் ஆராய்ச்சியாளர் ரகுராமன் கண்ணனுக்கு இந்த ஆண்டுக்கான கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. இவர் புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய வழிமுறைகளை உருவாக்கியவர்.

நுரையீரல், கருப்பை, மார்பகம், கணையம் மற்றும் கல்லீரல் புற்றுநோய் சிகிச்சையில் இவரது கண்டுபிடிப்புகள் பேருதவியாக இருந்து வருகின்றன.

தன்னுடைய கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் நான்கு ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்களையும் இவர் தொடங்கியுள்ளார்.

தற்போது அமெரிக்காவின் மிசோரி பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.

ரகுராமன் கண்ணன், சென்னை ஐஐடியில் வேதியியல் பிரிவில் எம்.எஸ் பட்டம் பெற்றவர். தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், உலகளாவிய சுகாதாரத் துறையில், குறிப்பாக அதிநவீன ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் இந்திய விஞ்ஞானிகளின் பங்களிப்பை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்