சென்னை: ரியல் எஸ்டேட் நிறுவனமான காசாகிராண்ட்டின் நிறுவனர் அருண் எம்.என். தனது நிறுவனத்தில் பணியாற்றும் 1,000 ஊழியர்களை ஒரு வாரகாலச் சுற்றுலாவாக லண்டனுக்கு அனுப்பியுள்ளார்.
இது நிறுவனத்தின் வருடாந்தர ‘லாப பங்கு போனஸ்’ திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஊழியர்களின் கடின உழைப்பு, நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அவர்கள் அளித்த பங்களிப்பைப் பாராட்டி வெகுமதி அளிக்கும் விதமாக இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா, துபாயில் பணியாற்றும் ஊழியர்களுக்கான இந்தச் சுற்றுலாவின் முழுச் செலவையும் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.
2004ல் அருண் எம்.என். தொடங்கிய காசாகிராண்ட் நிறுவனம், சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு போன்ற நகரங்களில் முன்னணி நிறுவனமாக வளர்ந்துள்ளது.
காசாகிராண்ட் நிறுவனம் ஊழியர்களை அங்கீகரிப்பதில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இதற்கு முன்பு சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, துபாய், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு 6,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைச் சுற்றுலா அனுப்பியுள்ளது.
இதுபற்றி நிறுவனர் அருண் எம்.என். கூறுகையில், “ஊழியர்கள்தான் நிறுவனத்தின் முதுகெலும்பாக இருக்கின்றனர். நிறுவனத்தின் லாபத்தை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதே எங்களது கலாசாரம்,” என்று பெருமையுடன் கூறினார்.

