புதுடெல்லி: இந்தியாவிலுள்ள 250க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய துறைமுகங்களின் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்பாக மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையை (சிஐஎஸ்எஃப்) அந்நாட்டு அரசு நியமித்துள்ளது.
தற்போது 13 முக்கியத் துறைமுகங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை சிஐஎஸ்எஃப் மேற்கொண்டு வருகிறது. மற்ற துறைமுகங்களில் மாநிலக் காவல்துறையும் தனியார் நிறுவனங்களும் பாதுகாப்புப் பணிகளை நிர்வகித்து வருகின்றன.
இந்நிலையில், மேலும் 67 முக்கியத் துறைமுகங்களின் பாதுகாப்புப் பணி விரைவில் சிஐஎஸ்எஃப் வசம் ஒப்படைக்கப்படவுள்ளது. கணினித் திரைவழி சரக்குகளைச் சோதனையிடுவது, உள்நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் அனுமதி அளிப்பது உள்ளிட்ட பணிகளை அது மேற்கொள்ளும்.
துறைமுகங்களின் பாதுகாப்பைப் பொறுத்தமட்டில் தற்போது நிலையான பாதுகாப்பு நெறிமுறைகள், பொதுவான துறைமுகப் பாதுகாப்புத் திட்டத்தை சிஐஎஸ்எஃப் வகுக்கும்.
இதனையடுத்து, முதன்மையான 80 துறைமுகங்களிலும் பாதுகாப்புப் பணிகளுக்குத் தலா 800 - 1,000 பேர் தேவைப்படுவர் என்றும் அதனால் மேலும் 10,000 பேரைப் பணியமர்த்த ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சிடம் சிஐஎஸ்எஃப் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையே, இம்மாத இறுதியில் ராய்ப்பூரில் நடக்கவிருக்கும் காவல்துறை தலைமை இயக்குநர்களுக்கான வருடாந்தர மாநாட்டில் கடலோரப் பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அதில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக, கடல் துறைமுகங்கள் வழியாகப் போதைப்பொருள்கள், தடைசெய்யப்பட்ட மற்றப் பொருள்கள் கடத்தல் தொடர்பான பல முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2020-24 காலகட்டத்தில் துறைமுகங்கள் வழியாக 19 முறை போதைப்பொருள் கடத்தல் முயற்சிகள் தடுக்கப்பட்டு, மொத்தம் ரூ.11,311 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தத் தகவலை மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் கடந்த மார்ச் 25ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

