அமராவதி: திருப்பதி கோவிலுக்குச் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் வர்தமான் ஜெயின், கிட்டத்தட்ட ரூ.200 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்க ஆபரணங்களை வியாழக்கிழமை (நவம்பர் 26) காணிக்கையாக வழங்கினார்.
ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில், கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் அந்த ஆபரணங்கள் தேவஸ்தான அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
திருமலை திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, தனிநபர் ஒருவர் வழங்கிய மிகப் பெரிய காணிக்கை அதுவாகும்.
கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த 121 கிலோ தங்க ஆபரணங்களை, தொழிலதிபர் வர்தமான் ஜெயின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் தேவஸ்தான உயர் அதிகாரிகளிடம் வழங்கினார்.
சென்னையில் உள்ள பிரபல நகைக்கடையில், ஆகம விதிகளின்படி மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட இந்த ஆபரணங்கள் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் 9 பெட்டிகளில் திருமலைக்குக் கொண்டுவரப்பட்டன. கடவுளுக்கான 45 வகையான ஆபரணங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
ஏழுமலையானின் தீவிரப் பக்தரான வர்தமான் ஜெயின், தேவஸ்தானத்திற்கு நன்கொடை அளித்தது இது முதல் முறை அல்ல. அவர் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கோவிலுக்கு ரூ.6 கோடி நன்கொடையாக வழங்கினார்.
பின்னர் பக்தர்களின் வசதிக்காக ஒரு மின்சாரப் பேருந்தைக் காணிக்கையாக அளித்தார்.
சென்னையைச் சேர்ந்த வர்தமான் ஜெயின், ‘டெல் சர்வீசஸ்’ நிறுவனத்தின் பிபிஓ பிரிவு நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி அந்த நிறுவனத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்றார்.
பின்னர் சுகாதாரத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் “ஆக்சஸ் ஹெல்த்கேர்” என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் மூலம் பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கியதோடு, தற்போது ‘ஆசியா இன்ஜினியரிங்’ நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார்.
சென்னையில் உள்ள காஞ்சி காமகோடி குழந்தைகள் டிரஸ்ட் மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலராகப் பொறுப்பு வகித்து, ஏழைக் குழந்தைகளுக்குத் தரமான மருத்துவச் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்து வருகிறார் திரு வர்தமான் ஜெயின்.
