புதுடெல்லி: குழந்தைத் திருமணங்கள் நடைபெறாத நாடாக இந்தியா உருவாகும் எனப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் அன்னபூர்ணா தேவி தெரிவித்துள்ளார்.
குழந்தைத் திருமணமில்லாத இந்தியாவிற்கான 100 நாள் விழிப்புணர்வுப் பிரசாரத்தை அவர் வியாழக்கிழமை (டிசம்பர் 4) தொடங்குகிறார்.
‘பால் விவாஹ் முக்த் பாரத்’ என்ற இயக்கத்தைத் தொடங்கிய மத்திய அரசு, குழந்தைத் திருமணமில்லா இந்தியாவுக்கான 100 நாள் விழிப்புணர்வுப் பிரசாரத்தை மேற்கொள்கிறது.
இந்நிகழ்ச்சியை புதுடெல்லியில் அமைச்சர் அன்னபூர்ணா தேவி முறையாகத் தொடங்கி வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் குழந்தைத் திருமணத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தேசிய உறுதிமொழி ஆகும். நாடு முழுவதிலும் இருந்து ஊக்கமளிக்கும் கதைகள் மற்றும் முன்னணி வீரர்களின் சாட்சியங்கள், கூட்டு முன்னேற்றத்தைக் கொண்டாடும் மற்றும் இந்த இயக்கத்தின் அடுத்த கட்டத்திற்கான உத்வேகத்தை வலுப்படுத்தும் திரைப்படம் ஆகியவை இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த 100 நாள் பிரசாரத்தின் மூலம், நாடு முழுவதும் உள்ள குடிமக்கள், நிறுவனங்கள், சமூகத் தலைவர்கள் இந்த இயக்கத்தில் சேரவும், குழந்தைத் திருமணமில்லா நாட்டை உருவாக்குவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் நிலைப்படுத்தவும் பெண்கள்-குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சு அழைப்பு விடுக்கும்.
“தடையற்ற ஒத்துழைப்பு, அடிமட்ட மக்களைச் சென்றடையும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், பஞ்சாயத்து ராஜ், கிராமப்புற மேம்பாடு, கல்வி அமைச்சுகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் தேசிய இயக்கம் செயல்படுத்தப்படும்,” என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.


