போராட்டத்துக்கு நாள் குறிக்க காவல்துறைக்கு சிஜேபி கெடு

போராட்டத்துக்கு நாள் குறிக்க காவல்துறைக்கு சிஜேபி கெடு

படம்: ராய்ட்டர்ஸ்

12 Oct 2026 - 6:50 pm

2 mins read

புதுடெல்லி: தேர்தல் ஆணையத்துக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி), ஜந்தர் மந்தர் பகுதியில் மீண்டும் போராட்டம் நடத்துவதற்கு காவல்துறையிடம் அனுமதி கோரியுள்ளது.

போராட்டம் நடத்துவதற்கான தேதியை முடிவு செய்ய டெல்லி காவல்துறைக்கு சிஜேபி 24 மணி நேரக் கெடு விதித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் டெல்லியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், அண்மையில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட சிஜேபி தலைவர்கள் சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர், டெல்லி நாடாளுமன்றச் சாலையில் உள்ள காவல் நிலையத்துக்குச் சென்று மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சௌரவ் தாஸ், போராட்டம் நடத்துவதற்குப் பத்து நாள்களுக்கு முன்பே அனுமதி கேட்க வேண்டும் என்று காவல்துறை கூறுவதாகவும் இம்முறை அவர்களே தேதியையும் நேரத்தையும் தேர்வு செய்யுமாறு கேட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

எனினும், 24 மணி நேரத்துக்குள் காவல்துறை பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள சௌரவ் தாஸ், காவல்துறை அறிவிப்பு வெளியிடத் தவறினால் போராட்டம் தீவிரமடையும் என்றார்.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன.

காவல்துறையைச் சாடும் எதிர்க்கட்சிகள்

இதனிடையே, புதுடெல்லி போராட்டங்களின்போது காவல்துறையினர் கடுமையான அடக்குமுறைகளைக் கையாள்வதாக எதிர்க்கட்சிகளும் செய்தியாளர்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

போராட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ், காவல்துறையினர் தம்மைத் தாக்கியதாகப் புகார் தெரிவித்துள்ளார்.

அதேபோல், அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளைக் காண்பித்தபோதிலும், 16க்கும் மேற்பட்ட செய்தியாளர்களைக் காவல்துறையினர் தடுத்து வைத்ததாக ‘எல்லைகளற்ற செய்தியாளர்கள்’ அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

“இது வெறும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீதான தாக்குதல் அல்ல. இது ஜனநாயக சுதந்திரங்கள், சட்டத்தின் ஆட்சி மீதான தாக்குதல்,” என்று பிரிட்டாஸ் கூறியுள்ளார்.

செய்தியாளர்கள் தடுத்து வைக்கப்பட்டதற்கு இந்தியாவைச் சேர்ந்த பல ஊடகச் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்
சிஜேபிபோராட்டம்தேர்தல் ஆணையர்காவல்துறை