புதுடெல்லி: டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் (சிஜேபி) முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் இனி பொதுமக்கள், அமைப்புகள் போராட்டங்கள் நடத்த அனுமதி அளிக்கப்படாது என அறிவிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக மூன்று மாற்று இடங்களை டெல்லி காவல்துறை ஒதுக்கீடு செய்துள்ளது.
அந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) காலை சிஜேபி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளான சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா, அஜிங்கியா ஷிண்டே உள்ளிட்டோர் மூவர்ணக் கொடியுடன் ஜந்தர் மந்தர் பகுதிக்குள் திடீரென நுழைந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர்.
போராட்டக் களத்திற்குள் நுழைந்த தங்களை காவல்துறையினர் கைது செய்ததாகவும் இதன்மூலம் இளையர்களுக்கு ‘நம்மால் முடியும்’ என்ற செய்தியைச் சொல்ல விரும்புவதாகவும் கைதுக்குப் பிறகான சமூக ஊடகப் பதிவில் சௌரவ் தாஸ் குறிப்பிட்டார்.
சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே, தமது சமூக ஊடகப் பதிவில், மக்களின் ஜனநாயக உரிமையையும் எதிர்ப்பையும் எவராலும் முடக்க முடியாது எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜந்தர் மந்தரில் போராட விதிக்கப்பட்ட தடைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
சு.வெங்கடேசன் கண்டனம்
ஜந்தர் மந்தர் பகுதியில் எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாத பாஜக அரசு, போராட்ட இடத்தை அவசரகதியாக மாற்றுவது அதன் அச்சத்தையே வெளிக்காட்டுவதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
“அதிகாரத்தில் இருப்பவர்கள் குடிமக்களின் குரலை அவர்கள் எங்கிருந்து எழுப்பினாலும் செவிமடுக்க வேண்டும். ஆனால், அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளைப் பறித்து, மக்களின் போராட்ட உரிமையை மத்திய அரசு நசுக்கி வருகிறது,” என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. ஆனால், அந்தக் குற்றச்சாட்டை பாஜகவும் தேர்தல் ஆணையமும் மறுத்துள்ளன.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கோரி, கடந்த சில நாள்களாகப் புதுடெல்லியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
போராட்டங்களை நடத்துவதற்கான இடங்கள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள் குரல் எழுப்பி வரும் நிலையில், டெல்லி முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
