ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது இண்டிகோ விமானத்தின் வால் பகுதி தரையில் உரசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புவனேஸ்வரிலிருந்து சுமார் 70 பயணிகளுடன் புறப்பட்ட இண்டிகோ விமானம், வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் ராஞ்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது எதிர்பாராதவிதமாக இண்டிகோ விமானத்தின் வால் பகுதி தரையில் மோதியது.
இதுகுறித்து ராஞ்சி விமான நிலைய இயக்குநர் வினோத் குமார் கூறியபோது, “விமானம் தரையிறங்கும்போது அதன் வால் பகுதி ஓடுபாதையை உரசியது. அந்தச் சமயத்தில் பயணிகள் திடீர் அதிர்வை உணர்ந்தனர். இருப்பினும், அதிர்ஷ்டவசமாகப் பயணிகள் அனைவரும் காயமின்றிப் பாதுகாப்பாகத் தப்பினர்,” என்று தெரிவித்தார்.
விமானம் பழுதுக்குள்ளானதால் ராஞ்சியிலிருந்து புவனேஸ்வருக்குச் செல்லவிருந்த அவ்விமானத்தின் அடுத்த சேவை ரத்து செய்யப்பட்டது.
அதனால் பாதிக்கப்பட்ட பயணிகளில் சிலர் தங்கள் பயணத்தை ரத்து செய்தனர். சிலர் பயணத் தேதியை மாற்றியமைத்தனர். மேலும், சில பயணிகள் சாலை மார்க்கமாகப் புவனேஸ்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

