புதுடெல்லி: எந்தவொரு நாடும் உலக சந்தைகளில் தனது இருப்பை வலுப்படுத்திக் கொள்ளும்போது உள்நாட்டுப் பொருளியலுக்குள் போட்டி நடைமுறைகளை வலுப்படுத்த வேண்டுமென்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார்.
உள்நாட்டு தயாரிப்புகள், (சுதேசி) மற்றும் தற்சார்பு குறித்த தேசிய தொலைநோக்கும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் இந்திய தொழில்முறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அதன் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல், இந்தியாவின் உற்பத்தி வெளிப்பாடானது மின்னணுவியல் உட்பட பல்வேறு புதிய துறைகளில் பன்முகத்தன்மை அடைந்துள்ளதாகக் கூறினார்.
உள்நாட்டு உற்பத்தித் திறன்களை வலுப்படுத்துவதில் கூடுதல் கவனம் தேவை என்று குறிப்பிட்ட அவர், காலாவதியான விதிகளை நீக்குதல், நான்கு தொழிலாளர் சட்டங்களை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட சட்ட கட்டமைப்புகளை நவீனமயமாக்குவதிலும் கவனம் செலுத்துவது அவசியம் என்றார். 23 மாநிலங்கள் இது தொடர்பான விதிகளை வகுத்துள்ளன. அந்த விதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உறுதிசெய்தல், சமூகப் பாதுகாப்பு, பணியிடப் பாதுகாப்பை வலுப்படுத்துவது ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்படும் என்றார் பியூஷ் கோயல்.

