புதுடெல்லி: மெட்டா நிறுவனத்திற்கும் மத்திய அரசாங்கத்திற்கும் எதிராக இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் வழக்குத் தொடர்ந்துள்ளது.
மாநிலத் தேர்தல்களுக்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் அரசியல் பதிவுகளையும் படங்களையும் மெட்டாவின் தானியக்க உள்ளடக்க நீக்க முறை முடக்குவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மெட்டா நிறுவனத்திற்கு எதிராக ஒரு வாரக் காலமாக வீதிகளில் நடத்திய போராட்டத்தை அடுத்து இப்போது காங்கிரஸ் நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளது.
2025ஆம் ஆண்டில் ஏறக்குறைய 70,000 பதிவுகளை முடக்கிய ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா, பிரதமர் நரேந்திர மோடியின் தானியக்க நீக்க உத்தரவின் கீழ் 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் 5.4 மில்லியனுக்கும் அதிகமான பதிவுகளை முடக்கியுள்ளதை இவ்வழக்கு சுட்டிக்காட்டுகிறது.
சட்டபூர்வமான அரசியல் கருத்து வெளிப்பாட்டை நசுக்கும் கருவியாக இந்த விதிமுறைகள் மாறிவிட்டதாகக் காங்கிரஸ் இளைஞர் அணியின் சமூக ஊடகப் பிரிவுத் தலைவர் மனு ஜெயின், டெல்லி உயர் நீதிமன்ற மனுவில் கூறியுள்ளார்.
விதிகளைப் பின்பற்றத் தவறினால் சட்டப் பாதுகாப்பைப் பறிக்கும் மத்திய அரசாங்கத்திற்கும், எதிர்ப்புத் தெரிவிக்கக் கோரும் எதிர்க்கட்சிக்கும் இடையே மெட்டா நிறுவனம் தவிக்கிறது.
ராகுல் காந்தி இடம்பெற்றுள்ள பிறந்தநாள் வாழ்த்துகள், புகழஞ்சலிகள், திருமண அழைப்பிதழ் ஆகிய பதிவுகளையும் மெட்டாவின் முறை முடக்குவதாகக் காங்கிரஸ் வாதிடுகிறது.
சட்டத்திற்கு உட்பட்டே இந்தியாவில் உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்துவதாகக் கூறும் மெட்டா, இது குறித்துக் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
வரும் நாள்களில் இவ்வழக்கின் விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
