திருவனந்தபுரம்: பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி திருக்கோவிலில் ஏறக்குறைய 270 ஆண்டுகளுக்குப் பிறகு மகா குடமுழுக்கு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) சிறப்பாக நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் திரளாகக் கலந்துகொண்டனர். குடமுழுக்கின்போது அவர்கள்மீது கலச நீர் தெளிக்கப்பட்டது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், பல நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் இக்கோவிலுக்கு வந்துசெல்கிறார்கள்.
நீண்டகாலமாக குடமுழுக்கு நடைபெறாத நிலையில், கோவிலில் புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த 2017ஆம் ஆண்டு இதற்காக வல்லுநர் குழு ஒன்றை அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக அவை முடங்கின. பின்னர் 2021ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கி நடந்து வந்த புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெற்றதையடுத்து குடமுழுக்கு நடந்துள்ளது.