புதுடெல்லி: ஒருங்கிணைந்த அரசியலமைப்பின் மூலம் இந்தியக் குடிமக்கள் பயனடைவார்கள் என்று அதிபர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
வளர்ந்த நாடாக மாறுவதற்கான இலக்கை நோக்கி இந்தியா வேகமாக நகரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசியலமைப்புச் சட்ட தினம் புதுடெல்லியில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அதிபர் முர்மு, அரசியலமைப்புச் சட்டம் என்பது நாட்டின் தேசிய காவியம் என்று குறிப்பிட்டார்.
அரசியலமைப்புச் சட்ட விதிகளைப் பின்பற்றுவது அனைவரது கடமை என்று அவர் அறிவுறுத்தினார்.
“அரசியலமைப்புச் சட்டம் வேற்றுமையில் ஒற்றுமைக்கு ஆதாரம். அரசியலமைப்புச் சட்டம் சட்டப்பேரவைக்கான ஆவணமாக இருந்தாலும், பொதுமக்களின் பங்கேற்பு, பரவலான பிரதிநிதித்துவம் மூலம் மக்களுக்கான ஒரு குறிப்பு புத்தகமாகவும் மாறியுள்ளது,” என்றார் அதிபர் முர்மு.
எதிர்காலத் தலைமுறையினர் அரசியலமைப்புச் சட்டத்துடன் இணைந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் இதைச் சாத்தியமாக்க அச்சட்டம் குறித்த சுவாரசியமான தகவல்களைக் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்றும் அதிபர் அறிவுறுத்தினார்.
“நிர்வாகம், சட்டமன்றம், நீதித்துறை ஆகிய மூன்று அரசு அமைப்புகளும் பரஸ்பர ஒருங்கிணைப்பு மூலம் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதற்கு அரசியலமைப்பு வலுவான முறையில் துணைநிற்கும்.
“மற்ற சேவைகளைப் போலவே நீதியும் வீட்டு வாசலில் வழங்கப்பட வேண்டும். சட்ட உதவி அடிமட்ட மக்களுக்கு எளிதில் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும்,” என்று அதிபர் முர்மு மேலும் தெரிவித்தார்.

