முன்னாள் கேரள முதல்வர் மீது லஞ்ச ஊழல் வழக்குப் பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் கேரள முதல்வர் மீது லஞ்ச ஊழல் வழக்குப் பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவு

கோப்புப் படம்: டைம்ஸ்நவ்

09 Oct 2026 - 6:39 pm

2 mins read

திருவனந்தபுரம்: முன்னாள் கேரள முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன், அவரது மகள் வீணா, மருமகன் முகம்மது ரியாஸ் ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவுசெய்ய கேரள உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) உத்தரவிட்டுள்ளது.

பினராயி விஜயனின் மகள் வீணா பெயரில் ‘எக்சாலோஜிக் சொல்யூஷன்ஸ்’ என்னும் நிறுவனம் இருந்தது. ஆனால், அது செயல்பாட்டில் இல்லை என்று விசாரணையில் தெரியவந்தது.

செயல்படாத அந்த நிறுவனத்துக்கு, தகவல் தொழில்நுட்ப ஆலோசனைச் சேவைகள் என்ற பெயரில் ரூ.2.78 கோடி முறைகேடாகச் செலுத்தப்பட்டது.

கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூடைல் லிமிடெட் நிறுவனம் அந்தப் பணத்தை வீணாவின் நிறுவனத்துக்கு வழங்கியதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.

இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

அப்போது கோடிக்கணக்கான ரூபாய் ஹவாலா பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி அமலாக்கத்துறை தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 7ஆம் தேதி கேரள காவல்துறை டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது. அதில் பினராயி விஜயன், அவரது மகள் வீணா, மருமகன் முகம்மது ரியாஸ் ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், உடனடியாக வழக்குப் பதிவு செய்யாமல், இந்த விவகாரத்தை குற்றப்பிரிவுக்கு மாற்றி சிறப்புப் புலனாய்வுக் குழு மூலம் முதற்கட்ட விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டது.

கேரள அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து வழக்கறிஞர் கே.எம்.ஷாஜகான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அமலாக்கத்துறை ஆதாரங்களுடன் தகவல் கொடுத்த பிறகும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் முதற்கட்ட விசாரணை நடத்துவது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார்.

கேரள அரசுத் தரப்பில் முன்னிலையான தலைமை வழக்கறிஞர், குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் இருந்தால் முதற்கட்ட விசாரணை நடத்தலாம் என்று வாதிட்டார்.

கடந்த வாரம் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஏ.பதருதீன் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) வழக்கறிஞர் கே.எம். ஷாஜகான் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

குறிப்புச் சொற்கள்