சோனியா, ராகுலுக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு குற்றப்பத்திரிகையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு!

1 mins read
26670410-22c1-4daf-8b15-ba5beeb6eca0
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவர் மகன் ராகுல் காந்தி. - படம்: தினத்தந்தி

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 16) ஏற்க மறுத்து நிராகரித்தது.

சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்படும் வழக்குகள், காவல் துறை அல்லது சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகள் பதிவு செய்யும் அடிப்படை முதல் தகவல் அறிக்கையின் பின்னணியில் இருக்க வேண்டும்.

ஆனால், இந்த வழக்கு தனிநபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் மட்டுமே அமலாக்கத் துறையால் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

நேஷனல் ஹெரால்டு நிறுவனச் சொத்துகளைக் குறைந்த விலைக்கு வாங்கி அபகரிக்க முயன்றதாக, சுப்பிரமணிய சுவாமி அளித்த தனிநபர் புகாரின் அடிப்படையிலேயே அமலாக்கத் துறை இதுவரை விசாரணையை மேற்கொண்டு வந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி காவல்துறை அண்மையில்தான் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. ஆனால், அதற்கு முன்னரே அமலாக்கத் துறை விசாரணையைத் தொடங்கிவிட்டதையும், அடிப்படைத் தகவல் அறிக்கை இல்லாத நிலையில் விசாரணையை நடத்தியுள்ளதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாகவே அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்