திருவனந்தபுரம்: இந்தியா முழுவதும் கொவிட் -19 பெரும் தொற்றுப் பரவல் வேகமெடுத்துவரும் நிலையில், கேரளாவில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அம்மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கேரளாவில் மே 23ஆம் தேதி நிலவரப்படி இதுவரை 273 பேருக்குக் கொவிட் -19 பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோட்டயம் மாவட்டத்தில் 57 பேருக்கும், எர்ணாகுளத்தில் 49 பேருக்கும், திருவனந்தபுரத்தில் 73 பேருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கொல்லம் மாவட்டம் தலவுர் பகுதியை சேர்ந்த 59 வயது நபரும் திருவனந்தபுரத்தில் வாழயிலா பகுதியை சேர்ந்த 64 வயதுடையவரும் அந்நோய்க்கு பலியாகினர்.
இதனால், காய்ச்சல், சளி, தொண்டை வலி, இருமல், சுவாசப் பிரச்சினை உள்ளிட்ட அறிகுறி உள்ளோர் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேபோன்று மருத்துவமனைக்கு செல்வோர், கர்ப்பிணிகள், மூத்தோர், இதய நோய் உள்ளோர் மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கர்நாடகாவில் கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்ட 16 பேருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் 12 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த இருவாரங்களுக்கு முன்பு வரை, காய்ச்சல் ஏற்பட்டவர்களில் 60 விழுக்காட்டினருக்கு மேல் இன்புளுயன்ஸா வைரஸ் பாதிப்பு இருந்தது. ஆனால், தற்போது பெரும்பாலான மாதிரிகளில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திராவில் கொவிட் - 19 பாதிப்பு அதிகம் இல்லாத நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.