புதுச்சேரி: புதுச்சேரி கிரிக்கெட் சங்கத்தின் 19 வயதுக்குட்பட்டோர் அணியின் தலைமைப் பயிற்சியாளரை, உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் சிலர் மோசமாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 தொடருக்கான அணியில் தங்களைத் தேர்வு செய்யாத ஆத்திரத்தில், மூன்று வீரர்கள் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டனர்.
இந்தத் தாக்குதலில் பயிற்சியாளர் வெங்கட்ராமனின் மண்டை உடைந்ததாகவும் அவரது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை, தாக்குதல் நடத்திய மூவரையும் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி கிரிக்கெட் அணியில் வெளிமாநில வீரர்கள் போலிச் சான்றிதழ்களைக் கொடுத்து, உள்ளூர் வீரர்கள் என்ற பெயரில் விளையாடுவதாக நீண்ட காலமாகப் புகார்கள் எழுந்த நிலையில் தற்போது இச்சம்பவம் நடந்துள்ளது.
புதுச்சேரி கிரிக்கெட் சங்கத்தில் நடக்கும் அவதூறு குறித்து பேசுகையில், “இது மிகவும் தீவிரமான குற்றச்சாட்டு. புதுச்சேரி கிரிக்கெட் சங்கத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்து இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விரைவில் விசாரணை நடத்தும்,” என்று அவ்வாரியச் செயலாளர் தேவாஜித் சைகியா உறுதியளித்துள்ளார்.

