தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீபாவளி: 3 நாள்களில் 14 லட்சம் பேர் சென்னையிலிருந்து பயணம்

2 mins read
80f2112b-9aa5-422f-806f-15c321216500
தீபாவளிக்குச் சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களுக்காக கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து அக்டோபர் 16ஆம் தேதி முதல் அக்டோபர் 19ஆம் தேதி வரை 20,000க்கு மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. - படம்: நியூஸ்ஐடிலைஃப்
சென்னை மாநகரின் முக்கிய பகுதிகளில் உள்ள கடைத்தொகுதிகளுக்குப் புத்தாடை வாங்குவதற்காக மக்கள் குவிந்தனர்.
சென்னை மாநகரின் முக்கிய பகுதிகளில் உள்ள கடைத்தொகுதிகளுக்குப் புத்தாடை வாங்குவதற்காக மக்கள் குவிந்தனர். - படம்: ஊடகம்

சென்னை: தீபாவளித் திருநாளைச் சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்கு, சென்னையில் பணிபுரிவோர் தங்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனர். இதனால், பேருந்து, ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடந்த 3 நாள்களில் அரசுப் பேருந்து, ரயில்கள், தனியார் பேருந்துகளில் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.

சென்னை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிப்போர், தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக கடந்த 16ஆம் தேதி முதல் தமிழக போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை வரை சுமார் 3.50 லட்சம் பேர் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு அரசுப் பேருந்துகள் மூலமாகவும் தனியார் பேருந்துகள் மூலமாகவும் பயணம் செய்தனர்.

இதேபோல, தெற்கு ரயில்வே சார்பில் 20க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள், தென் தமிழகத்துக்கு பயணம் செய்வோர் என லட்சக்கணக்கானோர் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் திரண்டனர்.

சென்னையிலிருந்து கன்னியாகுமரி, ராமேசுவரம், திருநெல்வேலிக்கு சென்ற விரைவு ரயில்களில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகம் இருந்தது.

புத்தாடை, இனிப்பு வாங்க கடைவீதிகளில் மக்கள் குவிந்ததால், சென்னையின் முக்கிய சாலைகளில் மக்கள் நெருக்கம் அதிகமாகக் காணப்பட்டது.

இதேபோல, கோவை, திருப்பூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர். பயணிகள் சிரமமின்றி பயணம் செய்ய வசதியாக தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தொடர்ச்சியாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. வழக்கமான ரயில்கள் தவிர, சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. அனைத்து வாகனங்களிலும் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

குறிப்புச் சொற்கள்