திருவனந்தபுரம்: கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியது.
இந்நிலையில், அங்குள்ள இடவக்கோடு வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் சினி போட்டியிட்டார். இவர் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்தவர். கடந்த முறையைப் போலவே இப்போதும் இவர்தான் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இடவக்கோடு வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்ட சுவாதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
சுவாதிக்கு 1,889 வாக்குகள் கிடைத்தது. சினிக்கு 1,863 வாக்குகள் மட்டுமே கிடைத்ததையடுத்து, அவர் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் சினி கடும் அதிர்ச்சி அடைந்தார்.
இடவக்கோடு வார்டில் சினி என்ற பெயரில் மேலும் இரண்டு பேரை வேட்பாளராக களமிறக்கியது பாஜக. அவ்விரு வேட்பாளர்களும் மொத்தம் 44 வாக்குகள் பெற்றிருந்தனர். சினியின் தோல்விக்கு இதுவே காரணம் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, தன் வீட்டில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், ஏராளமான கட்சித் தொண்டர்கள் குவிந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி சினி உயிரிழந்துவிட்டார்.

