புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் காற்றுத் தூய்மைக்கேடு காரணமாக 200,000க்கும் அதிகமானவர்கள் சுவாச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2022ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடையில் டெல்லியில் உள்ள ஆறு அரசாங்க மருத்துவமனைகளில் சுவாச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காகச் சென்றுள்ளனர். இந்தக் காலக்கட்டத்தில் 30,000 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
டெல்லியில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2) நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் சுகாதார அமைச்சு அந்தத் தரவுகளை வெளியிட்டது.
காற்றுத் தூய்மைக்கேடு காரணமாக அதிகமானவர்கள் அவசர உதவிச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 30 மில்லியன் மக்கள் வாழும் புதுடெல்லி, உலகின் தூய்மைக்கேடான நகரங்களில் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.
டெல்லியில் குளிர் காலத்தின்போது காற்றுத் தூய்மைக்கேடு அதிகமாக இருக்கும். காற்றில் அடர்ந்த பனி இருப்பதால் புகை நகராமல் நிலத்திற்கு அருகேயே சுற்றிவரும். இது சுகாதாரச் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

