புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் விசாரணைகளை முழுமையாக இணையம்வழி நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படுவதாக இந்தியத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார்.
காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது தமக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
டெல்லியில் காற்றின் தரக்குறியீடு மோசமான நிலையில் பதிவாகி இருந்தது. வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) காற்றின் தரக்குறியீடு 335 புள்ளிகளாகப் பதிவானது.
இந்நிலையில், தாம் வியாழக்கிழமை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது உடல்நிலை பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட தலைமை நீதிபதி, இதே நிலை நீடித்தால் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளை மெய்நிகர் வடிவத்திற்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.
அவரது இக்கருத்தை ஆதரித்துள்ள மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், காற்றுத் தரக்குறியீடு 400 புள்ளிகளைக் கடந்துவிட்டால், நச்சுக்காற்றை சுவாசிப்பதற்குச் சமம் எனக் கூறினார்.
இதையடுத்து, உச்ச நீதிமன்ற விசாரணைகளை முழுமையாக இணையம்வழி மேற்கொள்வது தொடர்பாக முடிவெடுப்பதற்கு முன் வழக்கறிஞர் சங்கத்துடன் கலந்தாலோசிக்கப்படும் என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் உறுதியளித்தார்.

