புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக வியாழக்கிழமை (செப்டம்பர் 18) முதல் அரசு, தனியார் நிறுவனங்கள் 50 விழுக்காடு ஊழியர்களின் வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இணைய வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பழைய டீசல் வாகனங்களுக்கு நகருக்குள் வரத் தடை விதிக்கப்பட்டது. வியாழக்கிழமை (டிசம்பர் 18) முதல் டெல்லியில் சில வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கத் தடை விதிக்கப்படும் எனச் சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா அறிவித்துள்ளார்.
செல்லுபடியாகும் மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்பட மாட்டாது என்றும் டெல்லிக்கு வெளியிலிருந்து வரும் குறிப்பிட்ட சில தரநிலைக்குக் கீழான வாகனங்களுக்கு நகருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கிட்டத்தட்ட 30 மில்லியன் மக்கள் வசிக்கும் டெல்லி வட்டாரத்தில் காற்றின் தரக்குறியீடு 450ஐ கடந்து சுவாசிக்கவே தகுதியற்ற மிகவும் மோசமான நிலையை அடைந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள 40 காற்றுத்தர கண்காணிப்பு நிலையங்களில் 27 இடங்களில் காற்றுத் தரம் மிகவும் மோசமான நிலையில் பதிவாகியுள்ளது.
இதையடுத்து, அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலங்களில் 50% ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்துக்கு வந்து பணியாற்ற வேண்டும். அரசு அலுவலகங்களில் அத்தியாவசிய, அவசரப் பொதுச் சேவைகள் தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்ய, நிர்வாகச் செயலாளர்கள் தேவைக்கேற்ப அதிகாரிகளையோ அல்லது ஊழியர்களையோ அலுவலகத்திற்கு அழைக்கலாம்.
தனியார் அலுவலகங்கள் சுழற்சி முறையில் பணி நேரங்களை அமல்படுத்த வேண்டும், வீட்டிலிருந்து பணிபுரிவதற்கான விதிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். அலுவலகப் பயணங்கள் தொடர்பான வாகனப் போக்குவரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அரசு உத்தரவை மீறும் நிறுவனங்களுக்குக் கடும் அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.
காற்று மாசுபாட்டைத் தவிர்க்க டெல்லியில் கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் வேலையிழந்த கட்டுமான ஊழியர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வழங்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.
இதனிடையே, கடும் பனிப்பொழிவு காரணமாக டெல்லியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக ஆறடி தூரத்தில் செல்லும் வாகனங்கள்கூட கண்களுக்குத் தெரியவில்லை என வாகன ஓட்டிகளும் சாலையில் நடந்து செல்பவர்களும் கூறுகின்றனர்.
இதனால் பல விமானங்களின் வருகை, புறப்பாடு தாமதப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சென்னையில் இருந்து டெல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக புதன்கிழமையன்று அறிவிக்கப்பட்டது.


