புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அபாயக் கட்டத்தை எட்டியுள்ளதால், நிலைமையைச் சமாளிக்க டெல்லி அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதன் முக்கிய அம்சமாக, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் 50 விழுக்காடு ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற (Work from Home) அரசு உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து கடுமையான பிரிவில் நீடிப்பதால், பொதுமக்கள் கண் எரிச்சல் மற்றும் சுவாசக் கோளாறுகளால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் ஏற்கெனவே பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.
இந்நிலையில், தனியார் அலுவலகங்களில் கூட்டத்தைக் குறைக்கவும், வாகனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தவும் 50% ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, வகுப்புகள் இணையம் மூலம் நடைபெற்று வருகின்றன.
கட்டுமானப் பணிகள், கட்டட இடிபாடுகளைக் கையாளுதல், சாயம் பூசுதல் பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது.
தொடர்புடைய செய்திகள்
காற்று மாசை அதிகரிக்கும் டீசல் ஜெனரேட்டர்களின் பயன்பாட்டைத் தடுக்க, நகரமெங்கும் தடையற்ற மின்சாரம் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் வாகனங்களைச் சீர்செய்யக் கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தனிப்பட்ட முறையில் வாகனங்களில் செல்வதைக் கைவிட்டு, மெட்ரோ மற்றும் பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறும் டெல்லி அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

