புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியின் கல்காஜி வட்டாரத்தில் உள்ள பூமிஹின் முகாமில் (Bhoomihin Camp) கட்டட இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இந்திய உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க கட்டட இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறுமாறு பூமிஹின் முகாம் குடியிருப்பாளர்களுக்கு டெல்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) உத்தரவு விடுத்திருந்தது. சட்டவிரோதமானவை என்று வகைப்படுத்தப்பட்ட குடிசைகளை இடிப்பதற்காக வீடுகளிலிருந்து வெளியேறுமாறு குடியிருப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
டெல்லி எதிர்க்கட்சித் தலைவரும் கல்காஜி வட்டார சட்டமன்ற உறுப்பினருமான ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி, கட்டட இடிப்பு நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதனைத் தொடர்ந்து அவரை டெல்லி காவல்துறையினர் தடுத்துவைத்தனர்.
டெல்லியின் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு (பாஜக) எதிராகவும் முதலமைச்சர் ரேக்கா குப்தாவுக்கு எதிராகவும் அதிஷி கண்டனம் தெரிவித்தார். குப்பத்து மக்களுக்காகக் குரல் கொடுத்ததற்குத் தாம் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் சாடினார் என்று இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்தது.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலும் பாஜகவை சாடினார்.

