டெல்லியில் மோசமடைந்த காற்றுத்தரம்: பல ரயில்கள், 100 விமானங்கள் ரத்து

2 mins read
95cb4d9b-98d2-4a21-a7d3-eb00e94fa699
டெல்லியில் திங்கட்கிழமை காற்றுத்தரக் குறியீடு ஆக மோசமான நிலைக்குச் சென்றதாக ஊடகங்கள் தெரிவித்தன. - படம்: தினத்தந்தி

புதுடெல்லி: டெல்லியில் காற்றுத்தரம் படுமோசமான நிலையை எட்டியதால் விமான, ரயில் பயணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

தலைநகர் டெல்லி உள்பட பல்வேறு வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக, காலை, மாலை என பகல் முழுவதும் பனிமூட்டம் காணப்படுகிறது. மாலைநேரத்தில் பனிமூட்டம் அதிகமாகி வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்து வருகிறது.

வாகனங்களை ஓட்டுபவர்களும் பொதுமக்களும் அவதிக்குள்ளாயினர்.

இந்நிலையில், கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் ரயில் மற்றும் விமானப் பயணச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பனி மூட்டம், போதிய வெளிச்சமின்மையால் டெல்லியில் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், 300 விமானங்களின் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், பல ரயில்களும் காலதாமதமாகப் புறப்பட்டன.

டெல்லியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காற்றின் தரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கண் எதிரே வருபவரைக்கூட காணமுடியாத அளவுக்கு புகைமூட்டம் பார்வையை மறைத்து வருகிறது.

காற்று மாசைக் குறைக்க 4ஆம் கட்ட கட்டுப்பாடுகள் நடப்பில் உள்ளன. இருப்பினும் மாசு குறைந்தபாடில்லை.

காற்றின் தரக்குறியீடு டெல்லியின் அக்‌ஷர்தம் பகுதியில் 493ஆகவும் சர்தார் பட்டேல் மார்க் வட்டாரத்தில் 483ஆகவும் துவாரகா செக்டர்-14 பகுதியில் 469ஆகவும் பதிவு ஆனது. இது மோசமான காற்றுத்தரத்தைக் குறிக்கிறது.

இந்நிலையில், டெல்லியை அடர்த்தியான புகைமூட்டம் சூழ்ந்ததைக் காட்டும் காணொளிக் காட்சிகள் இணையத்தில் வலம் வருகின்றன.

காற்று மாசு மிகவும் அதிகரித்துள்ள நிலையில் டெல்லிக்குள் டீசல் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவையைத் தவிர அனைத்து நடுத்தர, கனரக சரக்கு வாகனங்களும் டெல்லிக்குள் நுழையக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இணையம் வாயிலாக வாதாட வழக்கறிஞர்களுக்கு ஆலோனை

காற்றின் தரம் ஆபத்தான நிலையை எட்டியதால், நீதிமன்றத்திற்கு வந்த வாதாடுவதைக் காட்டிலும் இணையம் வாயிலாகவே வழக்குகளில் வாதாடுமாறு வழக்கறிஞர்களுக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியுள்ளது.

சிங்கப்பூரர்களுக்கு ஆலோசனை

இந்நிலையில், டெல்லி தேசியத் தலைநகர் வட்டாரம் என்று அழைக்கப்படும் என்சிஆர் பகுதியில் உள்ள சிங்கப்பூரர்களுக்கு சிங்கப்பூர் தூதரகம் ஆலோசனைக் குறிப்பை வெளியிட்டுள்ளது. அதனை இந்தியாவில் உள்ள சிங்கப்பூர் தூதர் சைமன் வோங் விளக்கியதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

காற்றுத்தரம் குறித்து இந்திய அதிகாரிகள் தெரிவிக்கும் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு சிங்கப்பூரர்களைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக, வெளியில் நடமாடுவதைக் குறைப்பது, வெளியில் செல்ல நேர்ந்தால் முகக்கவசம் அணிவது போன்ற நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அது வலியுறுத்தி உள்ளது.

இதேபோல, பிரிட்டன் மற்றும் கனடா அரசாங்கங்களும் தங்களது குடிமக்களுக்கு டெல்லி காற்றுத்தரம் குறித்த வழிகாட்டிக் குறிப்புகளை வெளியிட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்