லக்னோ: 21ஆம் நூற்றாண்டின் அயோத்தி, மனிதகுலத்திற்கு புதிய வளர்ச்சியை வழங்கி வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடியை ஏற்றி வைக்கும் நிகழ்வில் பேசிய அவர், கொடியேற்ற விழாவை முன்னிட்டு ஒட்டுமொத்த நாடும் உலகமும் ராமரின் பக்தியிலும் உணர்விலும் மூழ்கி உள்ளதாகக் குறிப்பிட்டார்.
அயோத்தி ராமர் கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள 30 அடி உயர கம்பத்தில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 25) பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றினார்.
அதன் பின்னர் பேசிய அவர், இந்தியாவில் கடந்த 11 ஆண்டுகளில், பெண்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பழங்குடி சமூகங்கள், தாழ்த்தப்பட்டோர், விவசாயிகள், தொழிலாளர்கள், இளையர்கள் என சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் வளர்ச்சி அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
நாடு சுதந்திரத்தின் 100 ஆண்டுகளைக் கொண்டாடும் 2047ஆம் ஆண்டுக்குள், அனைவரின் முயற்சிகளாலும் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவது உறுதி என்று மோடி கூறினார்.
“இப்போது அயோத்தி, வளர்ச்சி அடைந்து வரும் இந்தியாவிற்கு முதுகெலும்பாகத் திகழ்கிறது. ராமர் நம்முடன் இணைவது உணர்ச்சிகள் வாயிலாகத்தான், வேறுபாடுகள் மூலம் கிடையாது. இதை அனைவரும் அறிவோம். அவருக்கு ஒரு நபரின் பரம்பரை முக்கியம் கிடையாது. அவர்களின் பக்திதான் முக்கியம். ராமர் கோவில் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார் பிரதமர் மோடி.
மேலும், தாம் ஏற்றியது வெறும் கொடி அல்ல, இந்தியாவின் கலாசார அடையாளம் என்றார் அவர். அயோத்தியில் காவிக்கொடி ஏற்றியது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“வாய்மையே வெல்லும் என்பதை இந்த ராமர் கொடி காட்டுகிறது. காவிக்கொடியானது ஒற்றுமையையும் தெய்வீகத்தையும் விளக்குகிறது. உலகம் முழுவதும் ராமர் உணர்வு பரவிக் கிடக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
“அயோத்தி அதன் வரலாற்றில் மற்றொரு சகாப்த நிகழ்வைக் கண்டுள்ளது. ஒவ்வொரு குடிமகனும் அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும்போது, சப்த மண்டபத்திற்குச் செல்ல வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார் பிரதமர் மோடி.
கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடிக்கு ராமர் கோவில் மாதிரியும் சிறிய ராமர் சிலையும் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன.
முன்னதாக, நிகழ்ச்சியில் பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அயோத்தி ராமர் கோவில் 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கை என்றும் சுயமரியாதையின் சின்னம் என்றும் குறிப்பிட்டார்.

