சாகர் (இந்தியா): இந்தியாவில் தன் மீது மோதிய காரின் ஓட்டுநரை நாய் பழிவாங்கும் அரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் சாகர் நகரில் இம்மாதம் 17ஆம் தேதியன்று பிரஹ்லாத் சிங் கோஷி என்ற ஆடவர் பிற்பகல் இரண்டு மணியளவில் திருப்பதி புரம் காலனி குடியிருப்புப் பகுதியில் தனது வீட்டிலிருந்து திருமண நிகழ்வைக் காண குடும்பத்தாருடன் புறப்பட்டார். வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 500 மீட்டர் தொலைவில் திருப்பும்போது அவரின் கார் தவறுதலாக சாலையோரத்தில் உட்கார்ந்திருந்த ஒரு நாய் மீது மோதியது என்று என்டிடிவி போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சிறு விபத்தாகத் தெரிவிக்கப்பட்ட அச்சம்பவத்தில் நாய்க்குக் காயம் ஏதும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
அதன் பிறகு அந்த நாய், குரைத்துக்கொண்டே காரைத் துரத்திச்சென்ற பின் காணாமற்போனது. பல மணிநேரம் கழித்து கோஷியும் அவரின் குடும்பமும் நள்ளிரவு 1 மணியளவில் வீடு திரும்பினர்.
குடும்பத்தினர் காரில் இல்லாத சமயத்தில், சட்டென்று அந்த நாய் காரைத் தாக்கி பல கீறல்களை ஏற்படுத்தியது.
சுட்டித்தனமாக இருக்கும் சிறார்தான் காரை சேதப்படுத்தியிருப்பர் என்று கோஷி குடும்பத்தார் முதலில் நினைத்தனர். பிறகு கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காணொளி மூலம் நடந்ததை அறிந்த அவர்கள் திகைத்துப்போயினர்.

