ரூ.262 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல்: உள்துறை அமைச்சு பாராட்டு

2 mins read
d870d8bf-4117-41b5-aa7f-03b6a92ace03
நாடு முழுவதும் போதைப்பொருள் கும்பல்களை அரசாங்கம் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் அழித்து வருவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். - படம்: ஊடகம்

புதுடெல்லி: போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகமும் டெல்லி காவல்துறை குழுவும் இணைந்து அண்மையில் தலைநகர் புதுடெல்லியில் ரூ.262 கோடி மதிப்புள்ள 328 கிலோ கிராம் மெத்தம்பெட்மைனைக் கைப்பற்றியதாக இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

நாடு முழுவதும் போதைப்பொருள் கும்பல்களை அரசாங்கம் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் அழித்து வருவதாக அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது அமித்ஷா குறிப்பிட்டார்.

மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும் என்ற அணுகுமுறையைப் பின்பற்றி, போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம், டெல்லி காவல்துறை குழுக்கள் செயல்படுவதாக அவர் கூறினார்.

‘ஆப்பரேஷன் கிரிஸ்டல் ஃபோர்ட்ரஸ்’ என்ற திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையின்போது, இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாகவும் திரு அமித்ஷா தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைக்காக போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம், டெல்லி காவல்துறையின் கூட்டுக் குழுவை அவர் பாராட்டினார்.

செயற்கை போதைப்பொருள் விற்பனையாளர்கள், அவர்களின் நாடுகடந்த வலையமைப்புகளை அகற்றுவதில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் சிறப்பான செயல்பாடு கவனத்துக்குரியது என்றார் அவர்.

“டெல்லியில் மிகப்பெரிய அளவில் மெத்தம்பெட்டமைன் பிடிபட்ட இடங்களில் இதுவும் ஒன்றாகும். பிரதமர் நரேந்திர மோடியின் ‘போதைப்பொருள் இல்லாத இந்தியா’ என்ற தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற பல்வேறு நிறுவனங்கள் எவ்வாறு தடையின்றிச் செயல்படுகின்றன என்பதற்கு இந்த நடவடிக்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு,” என்று தமது சமூக ஊடகப் பதிவு ஒன்றில் அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாக உளவுத்துறை மற்றும் தொழில்நுட்ப இடைமறிப்புகளின் அடிப்படையில், நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட கடத்தல்-விநியோகச் சங்கிலி கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், இறுதியில் இந்த பெரிய திருப்புமுனைக்கு வழிவகுத்த இடைவிடாத தேடலின் உச்ச கட்டமாக இந்த தீர்க்கமான நடவடிக்கை உள்ளது என்றார்.

குறிப்புச் சொற்கள்