பாட்னா: வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்த முதியவரைச் சுட்டுக்கொன்ற தாக்குதல்காரர்கள் இருவரை ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து அடித்துக்கொன்றனர்.
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் திங்கட்கிழமை (நவம்பர் 24) மாலை இச்சம்பவம் நிகழ்ந்தது.
மோட்டார்சைக்கிளில் வந்த ஆடவர் இருவர், தொம்மன்சாக் எனும் சிற்றூரைச் சேர்ந்த அஷர்ஃபி ராய் என்ற 80 வயது முதியவரைக் கண்மூடித்தனமாகச் சுட்டதாக பாட்னா (கிழக்கு) காவல்துறைக் கண்காணிப்பாளர் பரிச்சய் குமார் கூறினார்.
“அவ்விருவரும் உடனே அங்கிருந்து தப்ப முயன்றனர். ஆயினும், அவர்களால் வெகுதொலைவிற்குச் சென்றுவிட இயலவில்லை. முதியவர் சுடப்பட்ட தகவல் அறிந்ததும் அங்கு திரண்ட ஊர்மக்கள் அவ்விரு தாக்குதல்காரர்களையும் விரட்டிப் பிடித்து நையப்புடைத்தனர். அதனால், அவ்விருவரும் அங்கேயே உயிரைவிட நேர்ந்தது,” என்று திரு குமார் விளக்கினார்.
குண்டுக் காயமடைந்த ராய் பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆயினும், அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
சம்பவத்தைத் தொடர்ந்து, தடயவியல் துறையினர் நிகழ்விடத்திற்குச் சென்று சான்றுகளைச் சேகரித்தனர்.
அவ்விருவரும் கொல்லப்பட்ட இடத்திலிருந்து கற்கள், செங்கற்கள், கழிகள் ஆகியவற்றை அதிகாரிகள் மீட்டனர். அக்கம்பக்கத்திலுள்ள கண்காணிப்புப் படக்கருவிகளில் பதிவான காணொளிகளையும் காவல்துறை ஆராய்ந்து வருகிறது.
முதியவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு நிலத் தகராறு காரணமா எனக் கேட்டதற்கு, விசாரணை நடந்துவருவதால் இப்போதே அப்படிச் சொல்லிவிட முடியாது என்று திரு குமார் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், தாக்குதல்காரர்கள் யார் என இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் சொன்னார்.

