புதுடெல்லி: அனைத்துலக நலன் என்பது அமைதிப் பாதையின் மூலம் மட்டுமே சாத்தியமாகும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி வந்துள்ள ரஷ்ய அதிபர் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, அண்மைய சில நாள்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு முயற்சிகளின் வழீ, உலகம் அமைதிப் பாதைக்குத் திரும்பும் எனத் தாம் நம்புவதாகக் குறிப்பிட்டார்.
உக்ரேன் நெருக்கடிக்குப் பிறகு இந்தியாவும் ரஷ்யாவும் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாகவும் இது இரு நாடுகளுக்கும் இடையேயான பரஸ்பர நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என்றும் தெரிவித்த அவர், கொவிட் நெருக்கடி காலகட்டம் முதல் தற்போது வரை உலகம் பல்வேறு நெருக்கடிகளைக் கடந்துள்ளது என்றும் கூறினார்.
“மிக விரைவில் உலகம் தன்னைச் சூழ்ந்துள்ள கவலைகளில் இருந்து விடுபட்டு, சரியான திசையில் விடுபடும் என நான் நம்புகிறேன்.
“உலகச் சமூகத்திற்கு புதிய நம்பிக்கை எழும். இந்தியாவுக்கு என ஒரு பக்கம் இருக்கிறது. அந்தப் பக்கம் அமைதிதான்,” என்றார் பிரதமர் மோடி.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் மதிப்பாய்வு செய்தனர்.
மேலும், பரஸ்பர நலன்சார்ந்த வட்டார, உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதாகவும் இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சந்திப்பின்போது அதிபர் புட்டினுக்கு ரஷ்ய மொழியில் உருவாக்கப்பட்ட பகவத் கீதையின் பிரதியைப் பரிசாக வழக்கினார் பிரதமர் மோடி.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, ரஷ்ய அதிபர் புட்டினுக்கு அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்பு, இந்தியா-ரஷ்யா இடையேயான உத்திபூர்வ நட்பின் அடையாளமாக இருந்ததாக கிரெம்ளின் மாளிகை பாராட்டு தெரிவித்தது.
இரண்டு நாள் பயணமாக வியாழக்கிழமை மாலை புதுடெல்லி வந்தடைந்த அதிபர் புட்டினை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். இதனை கிரெம்ளின் மாளிகை வரவேற்றுள்ளது.
இதனிடையே, இந்தியா-ரஷ்யா இடையேயான ஒத்துழைப்பு எந்த நாட்டிற்கும் எதிரானது அல்ல என்றும் இருதரப்பினரின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கு இந்த ஒத்துழைப்பு தேவைப்படுவதாகவும் ரஷ்ய அதிபர் புட்டின் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோ உடனான புதுடெல்லியின் நெருங்கிய உறவுகளைக் கருத்தில் கொண்டு, அனைத்துலகச் சந்தைகளில் புதுடெல்லியின் வளர்ந்து வரும் பங்கை சில தரப்பினர் விரும்பவில்லை என்று இந்தியா புறப்படுவதற்கு முன்பு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் காரணங்களுக்காக செயற்கையான தடைகளை விதித்து இந்தியாவைக் கட்டுப்படுத்த சில தரப்பினர் முயற்சி செய்வதாகவும் புட்டின் கூறியுள்ளார்.

