புதுடெல்லி: போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்திய அரசாங்கம் வலியுறுத்துகிறது என்றும், அத்தகைய செய்திகள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளன என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கலந்துகொண்டு பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய அவர், போலிச் செய்திகளைத் தடுக்க உதவும் சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்றார். சமூக ஊடக தளங்கள், தவறான தகவல்கள், ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் ‘டீப் ஃபேக்கு’கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
எந்தவொரு தொலைக்காட்சி அலைவரிசை அல்லது செய்தித்தாள் மீதும் வரும் புகார்களை அரசும் இந்திய பத்திரிகை கவுன்சிலும் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், போலிச் செய்திகள் அல்லது போலிக் கதைகளை தீவிரமாக எதிர்க்க வேண்டும் என்றார்.
சமூகத்தின் மீதான நம்பிக்கை பராமரிக்கப்படுவதையும் மேலும் வலுப்படுத்தப்படுவதையும் உறுதி செய்வதற்கு கூட்டாகச் செயல்படுவது மத்திய அரசு, மாநில அரசு மற்றும் சிவில் சமூகத்தின் பொறுப்பு என்றும் திரு வைஷ்ணவ் வலியுறுத்தினார்.
“மின்னிலக்க இந்தியா மூலம் பிரதமர் மோடி நாட்டில் புதிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளார். அதன் நேர்மறையான விளைவுகளை நாடு கண்டு வருகிறது.

