புதுடெல்லி: போர் விமான விமானி இருக்கை வெளியேற்றும் சோதனையை ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு மையம் வெற்றிகரமாக மேற்கொண்டது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் விமானங்களில் பொருத்தப்படும் இந்த இருக்கை, ஆபத்தான நேரங்களில் விமானி தப்பிக்க உதவுகிறது. இருக்கையின் அடியில் ராக்கெட் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும். விமானி பொத்தானை இயக்கினால், அவர் இருக்கையுடன் விமானத்தை விட்டு பல அடி உயரம் தூக்கி வீசப்படுவார். பின் பாராசூட் உதவியுடன் தரையிறங்குவார்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிவேக ராக்கெட் இன்ஜினை போர் விமானத்தின் முன்பகுதி அமைப்புடன் பொருத்தி சிறப்பு தண்டவாளத்தில் அதிவேகத்தில் (மணிக்கு 800 கி.மீ.) செல்லும்போது, விமானி இருக்கை வெளியேறும் சோதனை சண்டிகரில் புதன்கிழமை (டிசம்பர் 3ஆம் தேதி) வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
ஏரோநாட்டிக்கல் மேம்பாட்டு முகமையுடன் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் இணைந்து இந்தப் பரிசோதனையை நடத்தியது.
இந்தச் சோதனையை வெற்றிகரமாக முடித்ததன் மூலம், வளர்ச்சியடைந்த ஒரு சில நாடுகள் மட்டுமே இடம்பெற்றுள்ள பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

