தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திய அதிபர் மாளிகையில் நடக்கும் முதல் திருமணம்

2 mins read
77a5c028-21b3-4879-9af8-12f07ed9217b
பூனம் குப்தா. - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்திய அதிபர் வசிக்கும் அதிகாரபூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவன் டெல்லியில் உள்ளது. இந்த மாளிகையில் முதன்முறையாக திருமண நிகழ்வு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய ரிசர்வ் காவல்படை அதிகாரியான பூனம் குப்தாவுக்கும் ஜம்மு காஷ்மீரில் அதே படையில் பணியாற்றும் மற்றொரு வீரருக்கும் அதிபர் மாளிகையில் பிப்ரவரி 12ஆம் தேதி (இன்று) திருமணம் நடைபெற உள்ளது.

பூனம் குப்தாவுக்கும் இந்திய அதிபர் திரௌபதி முர்முவுக்கும் எந்தவித உறவோ பந்தமோ இல்லை. எனினும் அதிபர் முர்மு வரலாற்றில் முதன்முறையாக அதிபர் மாளிகையில் திருமணத்தை நடத்த சம்மதித்துள்ளார்.

இதற்கு அதிபர் மாளிகையில் தனி பாதுகாப்பு அதிகாரி பூனம் குப்தா ஆற்றி வரும் சிறப்பான சேவைதான் முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பூனம் குப்தா, கடந்த 2018ஆம் ஆண்டு இளங்கலை பட்டபடிப்பு முடித்த பின்னர் யுபிஎஸ்சி தேர்வு எழுதி இந்திய அளவில் 81வது இடத்தைப் பிடித்தார்.

இதையடுத்து, மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையின் உதவி கமாண்டராக நியமிக்கப்பட்ட அவர், பீகார் மாநிலத்தின் நக்சலைட் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். மேலும், விதிமுறைகளைக் கடுமையாக பின்பற்றும் அதிகாரி என்றும் பெயர் வாங்கியவர்.

இந்நிலையில், ரிசர்வ் பாதுகாப்புப் படையின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் ராஷ்டிரபதி பவனில் திருமணத்தை நடத்த அதிபர் முர்மு சம்மதித்துள்ளார்.

இதன்மூலம் அதிபர் மாளிகையில் திருமணம் செய்துகொள்ளும் முதல் இணை எனும் பெருமை பூனம் குப்தாவுக்கும் அவரது கணவருக்கும் கிடைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்