பெண் விமானிக்கு பாலியல் வன்கொடுமை: 60 வயது விமானிமீது குற்றச்சாட்டு

2 mins read
50bdc22b-ad3d-400c-b85f-cae799dae179
ஹோட்டல் அறையில் வலுக்கட்டாயமாகத் தள்ளி தம்மை பாலியல் வன்புணர்வு செய்ததாக விமானி மீது பெண் பணியாளர் புகார் தெரிவித்துள்ளார். - கோப்புப் படம்: ஊடகம்

பெங்களூரு: தனியார் விமானம் ஒன்றின் பெண் விமானியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 60 வயது விமானி மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

பெங்களூரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) அந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் காவல்துறை கூறியது.

ஹைதராபாத்தில் உள்ள பேகம்பேட்டிலிருந்து ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தி வழியாக பெங்களூருக்குச் சென்ற சிறிய வகை தனியார் விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி அவர் என்றும் அவரது பெயர் ரோகித் சரண் என்றும் அதிகாரிகள் கூறினர்.

பெங்களூரில், ரோகித்தும் மற்றொரு விமானியும் சம்பவத்தன்று 26 வயது துணை விமானியான பெண்ணுடன் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு ஓய்வெடுக்கச் சென்றனர்.

மறுநாள் அவர்கள் புட்டபர்த்திக்கு விமானத்தில் திரும்பிச் செல்ல வேண்டும்.

ஹோட்டலில் தனித்தனி அறைகளில் அவர்கள் தங்கி இருந்த நிலையில், புகைபிடிக்க வெளியே செல்வதாகத் தம்மை ரோகித் அழைத்ததாகவும், பின்னர் அவரது அறைக்கு அருகே தம்மை வரச் சொன்னதாகவும் காவல்துறையிடம் அந்தப் பெண் துணை விமானி கூறினார்.

அங்கு சென்றதும், வலுக்கட்டாயமாகத் தம்மை அவரது அறைக்குள் தள்ளி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகவும் அந்தப் புகாரில் அவர் தெரிவித்தார்.

வியாழக்கிழமை (நவம்பர் 20) பேகம்பேட் திரும்பியதும் தமக்கு நேர்ந்த கதி குறித்து தமது விமான நிறுவனத்தின் நிர்வாகத்திடம் அந்தப் பெண் கூறினார்.

தொடர்ந்து பேகம்பேட் காவல்நிலையத்தில் அவர் புகார் தெரிவித்தார்.

புகாருக்கு ஆளான 60 வயது விமானி மீது, பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்