புதுடெல்லி: இண்டிகோ விமானச் சேவை பாதிப்பால் இந்தியா முழுவதும் பலரும் ரயில்களை நாடி வருகின்றனர்.
ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. அவர்களுக்குப் போதுமான ரயில் பெட்டிகள் இருப்பதை உறுதிசெய்யும் பொருட்டு இந்திய ரயில்வே கூடுதல் பெட்டிகளை இணைத்து உள்ளது.
விமானச் சேவையில் திடீரென்று ஏற்பட்டுள்ள குழப்பத்தைத் தொடர்ந்து பயணத்துக்கு முன்பதிவு செய்திருந்த பல்லாயிரக்கணக்கான பயணிகள் கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
விமானப் பயணம் இல்லாவிட்டால் அடுத்ததாக மக்கள் நாடுவது ரயில் பயணத்தைத்தான். எனவே, எதிர்பாராத வகையில் ஏற்பட்டுள்ள அதிக தேவையைச் சமாளிக்கும் பணியில் இந்திய ரயில்வே இறங்கி உள்ளது.
போதுமான ரயில் பெட்டிகளும் அவர்கள் சிரமமின்றி பயணம் செய்ய போதுமான இருக்கைகளும் இருக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளில் அது ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், நாடு முழுவதும், முதல்தர பயணச் சேவை வழங்கி வரும் 37 ரயில்களில் கூடுதலாக 116 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருப்பதாக ரயில்வே அமைச்சு சனிக்கிழமை (டிசம்பர் 6) குறிப்பிட்டது.
நாடு முழுவதும் உள்ள 114 ரயில் வழித்தடங்களில் ஓடக்கூடிய ரயில்கள் அவை.
புதிதாக ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்ட ரயில்களில் பெரும்பாலானவை தென்னிந்திய மாநிலங்களுக்குச் சேவையாற்றக்கூடியவை.
தொடர்புடைய செய்திகள்
எனவே தென்னக ரயில்வே மட்டும் 18 ரயில்களில் பயணிகளுக்காகக் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளதாக அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கூடுதல் ரயில் பெட்டிகளும் இருக்கைகளும் சனிக்கிழமை நடப்புக்கு வந்ததால் பயணிகளின் சிரமங்கள் கணிசமாகக் குறைந்து வருகின்றன.
அதேபோல, மேற்கு ரயில்வே நான்கு முக்கிய ரயில்களில் 3ஏசி மற்றும் 2ஏசி பெட்டிகளை இணைத்துள்ளது. இந்தக் கூடுதல் வசதிகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. மேற்குப் பகுதியில் இருந்து டெல்லிக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை சமாளிக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு, மேற்குப் பகுதிகளுக்கும் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
அவற்றுடன் நான்கு சிறப்பு ரயில்களும் புதிதாக சேவையில் சேர்க்கப்பட்டுள்ளன. ஞாயிறு முதல் செவ்வாய் வரை (டிசம்பர் 7 முதல் 9 வரை) அந்த சிறப்பு ரயில்கள் சேவையாற்றும் என்று ரயில்வே அமைச்சு கூறியுள்ளது.

