கொல்லம்: ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் இருக்கும் பார்த்தசாரதி கோவிலில் மலர் அலங்காரம் செய்ததாக 27 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்த அவர்கள் அக்கோயிலுக்கு செல்லும் பிரதான பாதையில் அந்தக் கோலத்தைப் போட்டதாகவும் அதில் அந்த அமைப்பின் கொடியை வரைந்ததற்காகவும் அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை கூறியது.
மேலும், அக்கோயிலிலிருந்து 50 மீட்டர் துாரத்தில், சத்ரபதி சிவாஜியின் பதாகையும் வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
கொல்லம் மாவட்டத்தில் உள்ள முத்துபிலாக்காடு என்ற இடத்தில், பார்த்தசாரதி கோவில் உள்ளது. திருவிழாக்களின்போது அக்கோயிலுக்கு அருகே கட்சிக் கொடிக்கம்பங்களை நிறுவுவது தொடர்பாக அடிக்கடி மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து, கோவிலில் மலர் அலங்காரம் செய்யவும் அதன் அருகே பதாகைகள், கொடிக்கம்பங்கள் வைக்கவும் தடை விதித்து, கேரள உயர் நீதிமன்றம் 2023ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி ஓணம் பண்டிகையையொட்டி, பார்த்தசாரதி கோவிலைச் சுற்றி மலர் அலங்காரம் செய்த ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் 27 பேர்மீது அக்கோயிலின் அலுவலகப் பொறுப்பாளர் அசோகன், காவல்துறையில் புகார் அளித்தார்.
இதனையடுத்து, அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு அம்மாநில பாஜகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


