ஃபிளைதுபாய் விமானக் கடத்தல் முயற்சி: இந்திய புலனாய்வு அமைப்பு விசாரணை

ஃபிளைதுபாய் விமானக் கடத்தல் முயற்சி: இந்திய புலனாய்வு அமைப்பு விசாரணை

கோப்புப் படம்: என்டிடிவி

10 Oct 2026 - 8:40 pm

1 mins read

புதுடெல்லி: துபாயிலிருந்து புறப்பட்ட ஃபிளைதுபாய் பயணிகள் விமானத்தைக் கடத்த அல்லது விபத்துக்குள்ளாக்க முயன்ற சம்பவம் குறித்து இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு பயங்கரவாதத் தடுப்பு, விமானக் கடத்தல் தடுப்புச் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

முதல் தகவல் அறிக்கையின்படி (எஃஐஆர்) இச்சம்பவம் குறித்து விரிவாக விசாரணை நடத்துமாறு தேசிய புலனாய்வு முகமைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

செப்டம்பர் 30ஆம் தேதி 174 பயணிகள், 6 ஊழியர்களுடன் பயணித்த அந்த விமானத்தின் ஓமன் நாட்டுத் துணை விமானி, விமானி அறைக்குள் இந்திய விமானி ஸ்மித் மச்சாரைக் கத்தியால் தாக்கினார். படுகாயமடைந்த நிலையிலும் திரு ஸ்மிட் விமானி அறைக் கதவைத் திறந்ததால், பயணிகள் சிலர் துணை விமானியை மடக்கிப் பிடித்தனர்.

அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. துணை விமானியைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

அச்சம்பவம் நாட்டின் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என்பதால், சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம், விமானக் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் என்ஐஏ விசாரணை நடத்த இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

படுகாயமடைந்த கேப்டன் ஸ்மித் மச்சார் அபுதாபி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பின் நலமுடன் தேறி வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்கான பின்னணி,சதித்திட்டம் குறித்து முதற்கட்ட அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்