புதுடெல்லி: ஆளுநர்கள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வைத்த கோரிக்கையை ஏற்று நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகைகளின் ‘ராஜ் பவன்’ என்ற பெயர் ‘லோக் பவன்’ என்று மாற்றப்பட்டதுபோல, பிரதமர் அலுவலகத்திற்கு ‘சேவா தீர்த்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகைகள் ‘ராஜ் பவன்’ என்று இருந்தது. ஆளுநர்கள் ராஜாக்கள் அல்ல என்பதாலும் ஆளுநர் மாளிகை மக்களுக்கான தளம் என்பதாலும் ‘லோக்’ (மக்கள்) பவன் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
இந்தச் சூழலில், டெல்லியில் பிரதமர் அலுவலகம் (PMO) செயல்பட உள்ள புதிய கட்டட வளாகத்திற்கு ‘சேவா தீர்த்’ என்று பெயரிடப்பட உள்ளது. ‘சேவா தீர்த்’ என்பது ‘புனிதமான சேவைத் தலம்’ என்று பொருள்படும்.
கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இந்த வளாகத்தில், பிரதமர் அலுவலகத்துடன் அமைச்சரவைச் செயலகம், தேசியப் பாதுகாப்புக் கவுன்சில் அலுவலகம் ஆகியவை செயல்படும். உலகத் தலைவர்களுடனான உயர் மட்ட சந்திப்புகளுக்கான ‘இந்தியா ஹவுஸ்’ கட்டடமும் இதில் ஒரு பகுதியாக இருக்கும்.
பிரதமர் மோடியின் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, பிரதமரின் இல்லம் இருக்கும் ரேஸ்கோர்ஸ் சாலை ‘லோக் கல்யாண் மார்க்’ என்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க ராஜ பாதையை ‘கர்தவ்ய பாதை’ என்றும் மத்தியச் செயலகம் ‘கர்தவ்ய பவன்’ என்றும் பெயர் மாற்றப்பட்டது.

