அமலுக்கு வந்தது இந்தியா-நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

அமலுக்கு வந்தது இந்தியா-நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

கோப்புப் படம்: தி எக்கானமிக் டைம்ஸ்

20 Oct 2026 - 5:34 pm

2 mins read

புதுடெல்லி: இந்தியா, நியூசிலாந்து இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விஜயதசமி திருநாளான செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 20) முதல் முறைப்படி நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை முறைப்படி தொடங்கி வைத்தார்.

இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கையெழுத்தானது.

‘வளர்ச்சியடைந்த இந்தியா’ (விக்சித் பாரத் 2047) எனும் தொலைநோக்குப் பார்வைக்கு வலுசேர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலம், நியூசிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் பல்வேறு இந்தியப் பொருள்களுக்கு முழுமையான சுங்க வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் 20 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை எளிதாக்குவதற்கான நியூசிலாந்தின் உறுதிப்பாடு, உற்பத்தி, உள்கட்டமைப்பு, சேவைகள், புத்தாக்கம் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கான மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது என்று அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

இந்த ஒப்பந்தம் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்று குறிப்பிட்ட அவர், இருதரப்பு பங்காளித்துவம் மேலும் பல மைல்கற்களை எட்டும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

நடப்பு நிதியாண்டில் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் ஏறக்குறைய 1.1 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ள நிலையில், எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 4.2 பில்லியன் அமெரிக்க டாலராக (ரூ.35,000 கோடி) உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் உற்பத்தி, கட்டமைப்பு, சேவைத் துறைகளை வலுப்படுத்த நியூசிலாந்து சார்பில் 20 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத் தொழில்துறைக்கு பெரு நன்மைகள்

இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததை முன்னிட்டு, சென்னையிலிருந்து ஏறக்குறைய ரூ.63.78 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ரத்தினங்கள் நியூசிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

எட்டு முதல் 10 விழுக்காடு வரையிலான சுங்க வரிகள் நீக்கப்பட்டுள்ளதால், திருப்பூர் ஜவுளித் தொழில், கோவையின் வாகன உதிரிபாகங்கள், தோல்பொருள்கள் ஏற்றுமதியும் குறு, சிறு, நடுத்தர தொழில்களும் பெரும் பொருளியல் வளர்ச்சி காணும்.

அதே நேரத்தில், இந்திய விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு பால்பண்ணைத் துறை போன்ற துறைகளுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இளையர்களுக்குப் புதிய வாய்ப்புகள்

இந்தியக் கல்வி, தொழில்முறை திறமைகளை ஊக்குவிக்கும் வகையில், 5,000 தகுதியுள்ள இந்திய நிபுணர்களுக்குத் தற்காலிக வேலைவாய்ப்பு விசா, இளையர்களுக்கான சிறப்பு விசா நடைமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்
நியூசிலாந்துவர்த்தகம்தொழில்துறைஒப்பந்தம்உள்கட்டமைப்புவேலைவாய்ப்பு