புதுடெல்லி: டெல்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் (சிஜேபி) தேசியக் கொடி பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், பேரணி நடைபெறுவதற்கு முன்னதாகவே அக்கட்சியின் தலைவர் அபிஜித் தீப்கே, அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போரா உள்ளிட்டோர் நெல்லி காவல் துறையினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், ஒரே வாரத்தில் தீப்கே தடுப்புக் காவலில் வைக்கப்படுவது இது இரண்டாவது முறை. முன்னதாக மும்பையிலிருந்து டெல்லிக்கு வந்திறங்கியபோது கைது செய்யப்பட்ட அவர், பின்னர் ஓர் ஆண்டு காலத்தில் எந்தப் பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டிருந்தார்.
போராட விரும்பும் மக்களுக்கு கரப்பான்பூச்சி மக்கள் கட்சி (சிஜேபி) புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த முயன்ற சிஜேபி நிர்வாகிகள் அஷுதோஷ் ரங்கா, சௌரவ் தாஸ் ஆகியோர் ஐந்து நாள் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, டெல்லியிலுள்ள கன்னாட் பிளேஸ் பகுதியிலுள்ள மத்திய பூங்காவில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) மாலை 5 மணிக்கு மூவர்ண தேசியக் கொடி பேரணி நடத்தவுள்ளதாக, சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தேசிய கொடி பேரணியில் பங்கேற்கத் தயாரான மக்களுக்கு சிஜேபி புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
மூவர்ணக் கொடியை அசைப்பது குற்றமல்ல, கன்னாட் பிளேசுக்கு 5 பேருக்கும் குறைவான குழுக்களில் செல்லுங்கள். தேசியக் கொடியை ஏந்தி, கொடியுடன் இருக்கும்படியான புகைப்படங்களை எடுத்துக்கொள்ளுங்கள். கன்னாட் பிளேசில் இருந்து புறப்பட்டு மூவர்ணக் கொடியை அசைப்பது குற்றமல்ல என்பதை நாட்டுக்குக் காட்டுங்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, கன்னாட் பிளேசில் சிஜேபி தலைமையிலான தேசியக் கொடி பேரணிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக வாக்காளர் பட்டியல் முறைகேடு புகார்களை முன்வைத்து கன்னாட் பிளேஸ் பகுதியில் தேசியக் கொடியை ஏந்திப் போராட்டம் நடத்த சிஜேபி அழைப்பு விடுத்திருந்ததையடுத்து, டெல்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, பலத்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அசம்பாவிதங்களைத் தடுக்க ஆயிரக்கணக்கான காவல்துறையினர் கன்னாட் பிளேஸ் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கண்காணிப்பிற்காக 35 கூடுதல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கன்னாட் பிளேஸ், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 16, 17 ஆகிய தேதிகளில் அப்பகுதி மூடப்படும் என புதுடெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. தடையை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
கடந்த ஆண்டு முதல் 130 மில்லியனுக்கும் அதிகமான பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதைக் கண்டித்து இளைஞர்கள் நடத்தி வரும் இந்தப் போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது.
தொடர் போராட்டங்களால் தங்களின் வணிகம், வாழ்வாதாரம்,போக்குவரத்து பாதிக்கப்படுவதாகக் கன்னாட் பிளேஸ் வணிகர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
அமைதியான முறையில் போராடுவது ஜனநாயக உரிமை என்றும், இணையச் சேவைத் துண்டிப்பு, நகரை முடக்குவதன் மூலம் அரசாங்கமே வணிகங்களைப் பாதிப்படையச் செய்கிறது என்றும் தீப்கே முன்னதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
