மாஸ்கோவில் எரிபொருள் தட்டுப்பாடு: இந்திய பெட்ரோல் ரஷ்யா சென்றடைந்தது

மாஸ்கோவில் எரிபொருள் தட்டுப்பாடு: இந்திய பெட்ரோல் ரஷ்யா சென்றடைந்தது

2 mins read
cf7f62e7-3ca3-4d3a-a022-c43d2443f230
பெட்ரோல், டீசல் கிடைக்காமல் வாகனங்கள் தவிக்கின்றன. ரஷ்யாவில் உள்ள ஒரு பெட்ரோல் நிரப்பு நிலையத்தில் ஆகஸ்ட் 6ஆம் தேதி இவ்வாறு வாகனங்கள் வரிசைபிடித்து நின்றன. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

மாஸ்கோ: உக்ரேனுடனான போரில் தனது எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், உலக நாடுகளிலிருந்து பெட்ரோலை இறக்குமதி செய்யும் நிலைக்கு ரஷ்யா தள்ளப்பட்டுள்ளது.

அந்நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது.

உள்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளதால் இந்தியாவிலிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்வதை ரஷ்யா தொடங்கிவிட்டது.

அதனைத் தொடர்ந்து முதலாவது இறக்குமதி ஆகஸ்ட் 5ஆம் தேதி நிகழ்ந்தது. மேலும் பல எண்ணெய்க் கப்பல்கள் இந்தியாவிலிருந்து ரஷ்யா செல்லவிருக்கின்றன.

எகிப்து அருகே உள்ள கடற்பகுதியில் கப்பல்களுக்கு இடையே மாற்றப்பட்டு, ரஷ்யாவுடன் தொடர்புடைய எண்ணெய்க் கப்பல்கள் மூலம் இந்த எரிபொருள் மாஸ்கோவுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

இந்தியாவிலிருந்து ரஷ்யா எரிபொருளை இறக்குமதி செய்வது இதுவே முதல் முறை என்று கேப்ளர் தரவுகள் தெரிவிக்கின்றன.

இது, ரஷ்யாவின் பெட்ரோல் தட்டுப்பாட்டின் தீவிரத்தை உணர்த்துவதாகக் கூறப்படுகிறது.

ரஷ்யாவின் முன்னணி எண்ணெய் உற்பத்தியாளரான ரோஸ்நெஃப்ட் ஆதரவு பெற்ற இந்தியச் சுத்திகரிப்பு நிறுவனமான நயாரா எனர்ஜி இதற்கான முக்கிய ஆதாரமாக உருவெடுத்துள்ளது.

“இந்தியாவிலிருந்து பெட்ரோல் வருவது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று,” என்று கேப்ளர் அமைப்பின் முதன்மை ஆய்வாளர் சுமித் ரிடோலியா தெரிவித்துள்ளார்.

ரஷ்யா ஏற்கெனவே பெலருஸ் போன்ற அண்டை நாடுகளிலிருந்து பெட்ரோலை இறக்குமதி செய்துவருகிறது.

ரஷ்யச் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான உக்ரேனின் தாக்குதல்கள் ஒருபுறமும் மத்திய கிழக்கில் அமெரிக்கா-ஈரான் இடையிலான மோதல்கள் மறுபுறமும் நிலவி வரும் வேளையில், உலகளாவிய எரிபொருள் சந்தை சவால்களை எதிர்நோக்கி வருகிறது.

எரிபொருள் சந்தையில் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால், காலம் காலமாக மற்ற நாடுகளுக்கு எரிபொருளை ஏற்றுமதி செய்து வந்த மாஸ்கோ, தற்போது இறக்குமதி செய்ய நேரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
ர‌ஷ்யாஎரிபொருள்தட்டுப்பாடு