கோதாவரி-காவிரி நதிகள் இணைப்பு: சந்திரபாபு நாயுடு, விஜய் தீவிர ஆலோசனை

கோதாவரி-காவிரி நதிகள் இணைப்பு: சந்திரபாபு நாயுடு, விஜய் தீவிர ஆலோசனை

படம்: நியூஸ் 18

14 Oct 2026 - 4:46 pm

2 mins read

விஜயவாடா: தென்னிந்தியாவின் நீண்டகால நதிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு, தமிழக முதல்வர் விஜய், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு இடையே உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் விஜயவாடாவில் நடைபெற்றது.

இதற்காக அதிகாரபூர்வப் பயணமாக ஆந்திரா சென்றுள்ள தமிழக முதல்வர் விஜய்க்கு, கன்னவரம் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அம்மாநில அமைச்சர் நாரா லோகேஷ் ஆகியோர் நேரில் சென்று பாரம்பரியச் செண்டை மேளங்கள் முழங்க உற்சாகமாக வரவேற்றனர்.

இதையடுத்து, சந்திரபாபு நாயுடுவின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில், இரு மாநில உறவுகள், நதிநீர் மேலாண்மை தொடர்பாக விவாதிக்கப்பட்டன. குறிப்பாக, தென்னிந்தியாவின் நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையிலான கோதாவரி-கிருஷ்ணா-காவிரி நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆக்கபூர்வமாக ஆலோசித்தனர்.

மேலும், சென்னை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் தெலுங்கு-கங்கை திட்டத்தின் கீழ், கண்டலேறு, சோமசீலா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு உரிய கிருஷ்ணா நதிநீரை தடையின்றி வழங்குவது குறித்தும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தமிழகத்தின் நீர் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும் தற்போதைய நீர் இருப்பைக் கொண்டு உடனடியாக நீரை விடுவிப்பது குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக அலசப்பட்டது.

இச்சந்திப்பின்போது தமிழக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், இரு மாநில உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர்.

தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, அண்டை மாநிலமான ஆந்திராவுக்கு முதல்வர் விஜய் மேற்கொண்டுள்ள இந்த முதல் அதிகாரபூர்வப் பயணம், இரு மாநிலங்கள் இடையேயான நதிநீர்ச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்கும் நல்லுறவை வலுப்படுத்துவதற்குமான முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்