தங்கம் விலை தொடர்ந்து சரிவு

தங்கம் விலை தொடர்ந்து சரிவு

கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

21 Oct 2026 - 6:05 pm

2 mins read

பெங்களூரு: கச்சா எண்ணெய் விலை உயர்வாலும் பணவீக்கம் குறித்த கவலைகளாலும் புதன்கிழமை (அக்டோபர் 21) தங்கத்தின் விலை தொடர்ந்து நான்காவது நாளாகச் சரிந்தது.

ஓர் அவுன்ஸ் தங்கம் 0.2 விழுக்காடு சரிந்து 4,118.18 அமெரிக்க டாலராகக் குறைந்தது. மேலும், டிசம்பர் மாத விநியோகத்திற்கான அமெரிக்கத் தங்கத்தின் ‘ஃபியூச்சர்ஸ்’ விலை 0.2 விழுக்காடு சரிந்து 4,136.20 அமெரிக்க டாலராகப் பதிவானது.

மத்திய கிழக்கு வட்டாரத்தில் விநியோகம் குறித்த கவலைகள், செங்கடல் கப்பல் போக்குவரத்துக்கான அபாயம் மற்றும் சவூதி அரேபியாவின் எண்ணெய்க் கட்டமைப்பு மீதான அச்சுறுத்தல்கள் காரணமாகப் புதன்கிழமை கச்சா எண்ணெய் விலை சற்றே உயர்ந்தது.

“கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால், அது பணவீக்க அழுத்தத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்தி, கடுமையான பணக்கட்டுப்பாட்டுக் கொள்கை குறித்த எதிர்பார்ப்புகளை வலுப்படுத்துகிறது.

“அதனால், தங்கத்தின் விலை தொடர்ந்து சற்று அழுத்தத்தில் இருக்கக்கூடும்,” என்று டிஎச்எஃப் கேப்பிட்டல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் சொத்து மேலாளருமான பாஸ் கூய்ஜ்மேன் கூறியுள்ளார்.

தங்கம் விலை அவ்வபோது சிறிய அளவில் ஏற்றம் கண்டாலும், பெரும்பாலும் குறைந்து வருகிறது. எனினும், இந்த விலைச் சரிவு தற்காலிகமானது தான் என்றும் வரும் காலங்களில் தங்கம் விலை கூடுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

அதிக வட்டி விகிதங்கள் பொதுவாக தங்கத்தின் விலையைக் குறைக்கின்றன. ஏனெனில், வட்டி தராத தங்கத்தை வைத்திருப்பதற்கான வாய்ப்புச் செலவை அவை அதிகரிக்கின்றன.

நடப்பு அக்டோபர் மாதம் ராய்ட்டர்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தாது என கிட்டத்தட்ட அனைத்து பொருளியல் நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து நீடிக்கும் பணவீக்கம் கடுமையான நடவடிக்கைகளை வலியுறுத்தினாலும், கொள்கை வகுப்பாளர்கள் நிதானத்தைக் கடைப்பிடிப்பதால், அமெரிக்க மத்திய வங்கி அக்டோபரில் வட்டி விகிதங்களை உயர்த்தாமல் டிசம்பரில் உயர்த்தும் என்று அவர்கள் கணித்துள்ளனர்.

வட்டி விகிதங்களின் எதிர்காலப் போக்கு குறித்த தகவல்களை அறிவதற்காக, அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமெரிக்க மத்திய வங்கியின் நாணயக் கொள்கை அறிவிப்பு கூட்டத்தை முதலீட்டாளர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்