பெங்களூரு: துபாயிலிருந்து இந்தியாவிற்குத் தங்கம் கடத்திய வழக்கில் கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சுங்கத்துறை 89 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இவ்வழக்கில் ரன்யா ராவ் உள்ளிட்ட நால்வர்க்குச் சுங்கத்துறை இணை இயக்குநர் சந்தீப் 399 பக்கங்கள் கொண்ட தீர்ப்பாணையைப் பிறப்பித்தார்.
அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட நால்வர்க்கும் சேர்த்து மொத்தம் ரூ.244 கோடிக்குமேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ரன்யா ராவுக்கு ரூ.89 கோடியும், தருண் கொண்டூரு ராஜுக்கு ரூ.49.51 கோடியும், சாஹில் ஜெயின், பரத் குமார் ஜெயின் என்ற இருவர்க்கும் தலா ரூ.53.06 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 மார்ச் 3ஆம் தேதி துபாயிலிருந்து பெங்களூரு கெம்பகவுடா அனைத்துலக விமான நிலையத்தைச் சென்றடைந்த ரன்யா ராவை வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, அவரிடமிருந்து ரூ.12.56 கோடி மதிப்பிலான 14.213 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அவரது வீட்டில் நடத்தப்பட சோதனையின்போது ரூ.2.67 கோடிப் பணமும் ரூ.2.06 கோடி மதிப்பிலான தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டன.
விசாரணையில் அதற்கு முன்னரும் பலமுறை ரன்யாவும் அவரது கூட்டாளிகளும் துபாயிலிருந்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.
கடந்த 2024 மார்ச் 7ஆம் தேதிக்கும் 2025 பிப்ரவரி 18ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் அவர்கள் ஏறக்குறைய 113 கிலோ தங்கத்தைத் துபாயிலிருந்து இந்தியாவிற்குக் கடத்திவந்ததாகக் கூறப்பட்டது.
முன்னதாக, ரன்யாவிற்கு ரூ.102 கோடி அபராதம் விதிக்க வேண்டும் என்று 2025 செப்டம்பரில் வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கோரியிருந்தனர்.
2025 மார்ச் 3ஆம் தேதி கைதுசெய்யப்பட்ட ரன்யா பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
ஆயினும், அவர் அந்நியச் செலாவணிப் பாதுகாப்பு, கடத்தல் நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
ஓராண்டுகாலம் தடுப்புக் காவலில் இருந்தபின் இவ்வாண்டு ஏப்ரல் 22ஆம் தேதி அவர் பெங்களூரு மத்தியச் சிறையிலிருந்து விடுதலையானார்.
