சென்னை: துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில், 11.50 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கடத்தி வந்த விமான நிறுவன ஊழியர்கள் இருவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
துபாயிலிருந்து சென்னைக்கு வரும் ‘எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்’ (Emirates Airlines) விமானத்தில், ஊழியர்களே தங்கம் கடத்தி வருவதாகச் சென்னை சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, புதன்கிழமை (டிசம்பர் 10) காலை 8:00 மணியளவில் விமானத்திலிருந்து பயணிகள் வெளியேறிய பின், வெளியே வந்த ஊழியர்களை அதிகாரிகள் கண்காணித்தனர்.
அவர்களில், ஆண் ஊழியர்கள் இருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
சோதனையில், அவர்கள் தங்கள் உடல் முழுவதும் 10 இடங்களில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டி, மறைத்து வைத்திருந்த 9 கிலோ 460 கிராம் எடையுள்ள தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 11.50 கோடி ரூபாய் ஆகும்.
விசாரணையில், துபாயில் விமானம் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பே ஒருவர் தங்களிடம் இந்தத் தங்கத்தைக் கொடுத்ததாகவும் சென்னை விமான நிலையம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருக்கும் நபரிடம் இதை ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், அங்கு தங்கத்தை ஒப்படைத்துவிட்டு, கமிஷனாகப் பல லட்சம் ரூபாயைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டிருந்ததும், கடத்தல் தங்கத்தை வாங்க அந்த ஓட்டல் அருகே மேலும் இருவர் காத்திருப்பதும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, சுங்கத்துறை அதிகாரிகள் அந்த ஓட்டலுக்குச் சென்று அதிரடிச் சோதனை நடத்தினர். அங்கு தங்கம் கடத்தல் சம்பவத்தின் முக்கியப் புள்ளியையும் அவரிடம் தங்கத்தை வாங்கிச் செல்லக் காத்திருந்த இருவரையும் பிடித்தனர்.
இச்சம்பவத்தில் விமான ஊழியர்கள் இருவர், முக்கியப் புள்ளி அவருக்கு உடந்தையாக இருந்த இருவர் என மொத்தம் ஐந்து பேரையும் சுங்கத்துறையினர் கைது செய்தனர். இந்தக் கடத்தல் பின்னணி குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

