வெளிநாட்டிலிருந்து கடத்தப்பட்ட ரூ.9 கோடி தங்கம் பறிமுதல்

வெளிநாட்டிலிருந்து கடத்தப்பட்ட ரூ.9 கோடி தங்கம் பறிமுதல்

படம்: டெக்கான் குரோனிக்கல்

11 Oct 2026 - 5:22 pm

1 mins read

விசாகப்பட்டினம்: வெளிநாட்டிலிருந்து கடத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 5.83 கிலோ தங்கத்தை இந்திய வருவாய்ப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதன் மதிப்பு 8.98 கோடி ரூபாய் எனச் சொல்லப்படுகிறது. கோல்கத்தாவிலிருந்து ஹைதராபாத்திற்குக் கடத்த முயன்றபோது அத்தங்கம் பிடிபட்டது.

உளவுத் தகவலையடுத்து, தேசிய நெடுஞ்சாலையில் வருவாய்ப் புலனாய்வு அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் அக்டோபர் 8-9 இரவுப்பொழுதில் இருவர் சென்ற காரை அவர்கள் வெகுதொலைவு விரட்டிச் சென்று இடைமறித்தனர்.

அந்த காரைத் தீவிரமாகச் சோதனை செய்ததில், காரின் முன்பகுதியில் அமரும் பயணி கால் வைக்கும் பகுதியில் ஒரு துளை அமைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அதனுள் மொத்தம் 5.833 கிலோ எடைகொண்ட தங்கக் கட்டிகள் இருந்த மூன்று பொட்டலங்களையும் அவர்கள் கண்டுபிடித்தனர். அந்த 24 காரட் தங்கம் இந்தியா-பங்ளாதேஷ் எல்லை வழியாக ஹைதராபாத்திற்குக் கடத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

பின்னர் சுங்கத்துறைச் சட்டம் 1962ன்கீழ் அந்தத் தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. காரில் இருந்த இருவரும் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள அவர்களிடம் விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்
தங்கம்கடத்தல்பங்ளாதேஷ்இந்தியா