புதுடெல்லி: இந்தியா, எளிதில் பரவக்கூடிய தட்டம்மை நோயைக் கட்டுப்படுத்துவதில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 98 விழுக்காடு குழந்தைகள் தட்டம்மை தடுப்பூசியின் முதல் தவணையையும் 95 விழுக்காடு குழந்தைகள் இரண்டாவது தவணையையும் பெற்றுள்ளனர்.
2001ஆம் ஆண்டு மதிப்பீடுகள் தொடங்கப்பட்டதிலிருந்து முதன்முறையாக, தடுப்பூசி செலுத்தப்படாத குழந்தைகள் அதிகம் உள்ள முதல் 10 நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியா வெளியேறியுள்ளது.
இருப்பினும் 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் தட்டம்மை, ரூபெல்லா நோய்களை ஒழிக்க வேண்டும் என்ற உலக சுகாதார அமைப்பின் வட்டார இலக்கை இந்தியா எட்டுவதற்கு வாய்ப்பில்லை. 2025ஆம் ஆண்டில் இந்தியாவில் கிட்டத்தட்ட 18,000 தட்டம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன. தேசிய அளவில் தடுப்பூசி செலுத்தும் விகிதம் அதிகமாக இருந்தாலும், நோய்ப் பரவல் தானாக நின்றுவிடவில்லை என்பதை இது காட்டுகிறது.
இந்தியா முன்னேற்றம் கண்டு வருவதாகவும் 2029க்குள் உள்நாட்டு தட்டம்மை பரவலைத் தடுத்து அதனைத் தொடர்ந்து 2032க்குள் நோய் ஒழிப்புச் சான்றிதழைப் பெற முடியும் என்றும் உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் கூறுகின்றனர்.
உலக சுகாதார அமைப்பின் நோய்த்தடுப்பு, தடுப்பூசிகள் மற்றும் உயிரியல் துறையின் இயக்குநரான டாக்டர் கேட் ஓ’பிரையன், “தட்டம்மை உட்பட நோய்த்தடுப்புத் துறையில் இந்தியா மிக அபாரமான முன்னேற்றங்களைக் கண்டுள்ள ஒரு நாடாகும். இந்த முன்னேற்றம் பல ஆண்டுகளாக மிகவும் கடினமாக உழைத்து, முதலீடு செய்து பெறப்பட்டதாகும். அந்த முதலீடுகளுக்குப் பலன் கிடைத்து வருகிறது,” என்று குறிப்பிட்டார்.
“அதிக தடுப்பூசி போடும் விகிதத்தை எட்டியுள்ள இந்தியா போன்ற நாடுகள், இனி அந்த விகிதத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள வேண்டும். எந்தக் காரணத்தினாலோ இன்னும் தடுப்பூசி சென்றடையாமல் விடுபட்டுள்ள சிறிய அளவிலான மக்கள்தொகைப் பிரிவுகளையும் குழந்தைகளையும் கண்டறிய வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்,” என்றார்.
“முயற்சிகளைக் கைவிட்டு, முதலீடுகள் குறையத் தொடங்கினால் குழந்தைகள் மீண்டும் பாதுகாப்பற்றவர்களாகவும், நோய்த்தொற்றுக்கு ஆளாகக்கூடியவர்களாகவும் மாறிவிடுவார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.
