பெங்களூர்: கர்நாடக மாநிலத்தின் மைசூர் மாவட்டத்தில் ரூ.729.43 கோடி மதிப்பீட்டில் அனைத்துலகத் தரத்திலான திரைப்பட நகரம் அமைக்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
‘கே.ஜி.எஃப்’, ‘காந்தாரா’ போன்ற கன்னடத் திரைப்படங்கள் உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், திரைப்படத் தயாரிப்பிற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மைசூரின் நஞ்சன்கூடு தாலுகாவில் உள்ள இம்மாவு கிராமத்தில் ஏறக்குறைய 160 ஏக்கர் பரப்பளவில் அரசு-தனியார் பங்காளித்துவத்தில் இது உருவாக்கப்படவுள்ளது.
உள்ளரங்கு, வெளியரங்குப் படப்பிடிப்புத் தளங்கள், மெய்நிகர் அரங்கம், ஐந்து நட்சத்திர, மலிவுக் கட்டண ஹோட்டல்கள், கருப்பொருள் பூங்கா, வணிக வளாகங்கள், திரையரங்குகள் போன்றவை அமைக்கப்படவுள்ளன.
திரைப்படப் பயிற்சிப் பள்ளி, அருங்காட்சியகம், மாநாட்டு மையம் போன்ற அம்சங்களையும் சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஹோட்டல்களுக்கு ரூ.174.32 கோடியும், கருப்பொருள் பூங்காவிற்கு ரூ.87.09 கோடியும் செலவிடப்படவுள்ளது.
கன்னடம், துளு, கொடவா, கொங்கணி உள்ளிட்ட கர்நாடகாவின் வட்டார மொழித் திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு 10 விழுக்காடு மானியம் வழங்கப்படவுள்ளது.
