பாட்னா: பீகார் மாநிலம், கதிஹார் மாவட்டத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது மேடையில் மயங்கி விழுந்த மணமகன், மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.
பாட்னாவில் வசித்துவந்த ஆயுர்வேத மருத்துவரான பவன் குமார் யாதவுக்கு நவம்பர் 25ஆம் தேதி குடியா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
மணமகளின் சொந்த ஊரான திரா சந்த்பூருக்கு மணமகன் வீட்டார் ஊர்வலமாகச் சென்று மிகுந்த கோலாகலத்துடன் திருமணத்தை நடத்தினர்.
மறுநாளான நவம்பர் 26ஆம் தேதி பவன் தம் மனைவியை வீட்டிற்கு அழைத்துவந்தார். புதுமணத் தம்பதியை உறவினர்களும் ஊர்மக்களும் வாழ்த்துவதற்காக அன்று மாலை ‘பஹுபோஜ்’ எனப்படும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விருந்தினர்கள் விருந்துண்டு மேடையில் அமர்ந்திருந்த மணமக்களை வாழ்த்திக்கொண்டிருந்தனர். கொண்டாட்டங்கள் முடிவுக்கு வரும் நேரத்தில் பவன் திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக ஃபல்கா சுகாதார நிலையத்திற்குக் கொண்டுசென்றனர். ஆனால், அவரின் உடல்நிலை மோசமடைவதைக் கண்ட மருத்துவர்கள், கூடுதல் சிகிச்சைக்காக பூர்னியாவில் உள்ள பெரிய மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லுமாறு பரிந்துரைத்தனர். பூர்னியா செல்லும் வழியிலேயே பவன் உயிரிழந்தார்.
இந்தத் துயரச் செய்தி இரு குடும்பங்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. கணவரின் மரணச் செய்தியைக் கேட்ட குடியா பலமுறை மயக்கமடைந்ததாகக் கூறப்படுகிறது.
ஒரு நாளுக்கு முன்பு தொடங்கிய திருமணக் கொண்டாட்டம் சில மணி நேரத்தில் சோகமாக மாறியதைக் கண்டு கிராம மக்களும் அதிர்ச்சியடைந்தனர்.
