புதுடெல்லி: போர்ச்சுகல் நாட்டில் குடியேற முயன்ற குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி, அவர்களது 3 வயதுக் குழந்தை ஆகியோர் லிபியாவில் ஆட்கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க ரூ.2 கோடி பிணைத்தொகை கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம், மெஹ்சானா மாவட்டம் பாதல்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் கிஸ்மத் சிங் சாவ்தா. இவரது தம்பி போர்ச்சுகல் நாட்டில் வசித்து வருகிறார். தம்பியின் குடும்பத்தைப் போலவே, தானும் தனது குடும்பத்துடன் போர்ச்சுகலில் நிரந்தரமாகக் குடியேற கிஸ்மத் சிங் திட்டமிட்டார்.
நேரடியாகச் செல்ல விசா நடைமுறைகள் கடினமாக இருந்ததால், முகவர் ஒருவர் மூலம் சட்டவிரோதமாகப் போர்ச்சுகலுக்குக் குடிபெயர முயன்றுள்ளனர். முகவர் கூறிய திட்டத்தின்படி, முதலில் துபாய் சென்ற அவர்கள், அங்கிருந்து லிபியாவின் பெங்காசி நகருக்குச் சென்றுள்ளனர்.
ஆனால், உறுதியளித்தபடி அவர்களைப் போர்ச்சுகலுக்கு அனுப்பாத அந்த முகவர், அவர்களை ஓர் ஆட்கடத்தல் கும்பலிடம் ஒப்படைத்துவிட்டார்.
தற்போது அந்தத் தம்பதய்ர் லிபியாவில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், குஜராத்தில் வசிக்கும் கிஸ்மத் சிங்கின் உறவினர்களைத் தொடர்பு கொண்ட அந்த ஆட்கடத்தல் கும்பல், குழந்தையையும் தம்பதியையும் உயிருடன் விடுவிக்க வேண்டுமானால் ரூ.2 கோடி பிணைத்தொகை தர வேண்டும் என்று மிரட்டியுள்ளது.
இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், குஜராத் மாநில அரசு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளது.
லிபியாவில் தற்போது இரு தரப்பினருக்கு இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
முக்கியமாக, ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு நகரில்தான் இந்தத் தம்பதி சிறை வைக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்களை அங்கிருந்து மீட்பதில் பெரும் சிக்கல் நீடிப்பதாகத் தெரிய வந்துள்ளது.

